ஊதுபத்தி கலரில் இருக்கிறியே... திருப்பூரில் அரசு பள்ளியில் மகனுக்கு கொடுமை! கதறும் தாய்.. உண்மை என்ன
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தீயில் தள்ளப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் இப்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காவல்துறை தரப்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது..
திருப்பூர் குன்னத்தூர் என்.ஆர்.கே.என். அரசு பள்ளி பள்ளி மாணவனை, சக மாணவர்சகள் தீயில் தள்ளியதாக கூறப்படுகிறது.. இது விளையாட்டு எனசொல்லப்பட்டாலும், ஒரு மாணவரின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊதுபத்தி கலர்
இதுகுறித்து சிறுவனின் தாய் செய்தியாளர்களிடம் கதறி அழுதவாறே கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். "என் மகனின் கைகளை ஒரு மாணவனும், கால்களை ஒரு மாணவனும் பிடித்து கொண்டு, தீயில் போட்டுள்ளனர்.. அடிக்கடி என் மகனின் நிறத்தைக் குறித்து கிண்டலடித்துள்ளனர்..
"நீ கருப்பாய் இருக்கிறாய், ஊதுபத்தி கலரில் இருக்கிறாய்" என்றெல்லாம் கிண்டல் செய்துள்ளனர்கள்.. இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தத் தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பூர் அரசு பள்ளி மாணவன்
இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இதில் சாதிய பாகுபாடு ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது.. அத்துடன் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது..
அந்த செய்திக் குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்கள் இருவரால் சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டு, தீ எரிந்து கொண்டிருந்த குப்பைக்குழியில் திட்டமிட்டு தள்ளப்பட்டதால் பலத்த தீக்காயம் ஏற்பட்டதாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்த தகவல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காயமடைந்த சிறுவன் 13 வயதுடையவன் என்றும், மேற்குபதி பகுதியில் வசித்து வருவதுடன், குன்னத்தூர் என்.ஆர்.கே.என். (NRKN) அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
கதறும் தாய்
மேலும், காயமடைந்த சிறுவனும் சம்பந்தப்பட்ட மற்ற மாணவர்களும் ஒரே வகுப்பில் படித்து வருபவர்கள் என்றும், ஒருவரையொருவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வரும் நண்பர்கள் என்றும் தெரியவருகிறது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை சேகரித்து அதற்காக ஒதுக்கப்பட்ட குப்பைக்குழியில் போடுவது மாணவர்களின் வழக்கமான செயலாக இருந்து வருகிறது.
அதன்படி, நேற்று (30.01.2026) குப்பைகளை குப்பைக்குழியில் போடச் சென்றபோது, அந்தக் குப்பைக்குழியில் ஏற்கனவே தீ எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அச்சமயத்தில் மாணவர்கள் ஒருவரையொருவர் விளையாட்டாக தள்ளிக்கொண்டிருந்தனர்.
அவ்விளையாட்டின்போது, இரண்டு மாணவர்கள் காயமடைந்த சிறுவனின் கை மற்றும் கால்களைப் பிடித்து தூக்கி ஆட்டியதில், அவர் சமநிலையை இழந்து தவறி தீ எரிந்து கொண்டிருந்த குப்பைக்குழியில் விழுந்துள்ளார்.
போலீஸ் சொல்லும் உண்மை
இதனைத் தொடர்ந்து, உடனடியாக சக மாணவர்கள் காயமடைந்த சிறுவனை மீட்டு, தீக்காயம் ஏற்பட்ட இடங்களில் தண்ணீர் ஊற்றி முதலுதவி செய்து, அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். பின்னர், இச்சம்பவம் உடனடியாக ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தில், எந்த நிலையிலும் காயமடைந்த சிறுவனை சாதி பெயரைச் சொல்லி திட்டவில்லை என்பதும், அவருக்கு காயம் ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லை என்பதும் தெளிவாகிறது. இச்சம்பவம் முழுமையாக விளையாட்டின்போது ஏற்பட்ட தற்செயலான நிகழ்வாகும். இதில் தீங்கிழைக்கும் அல்லது பாகுபாடு காட்டும் நோக்கம் எதுவும் இல்லை.
ஆகவே, இதனை சாதிய கொடுமை சம்பவமாகக் கூறி சில ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானதும் தவறானதும் ஆகும். எனவே, பொதுமக்கள் இவ்வகையான பொய்யான மற்றும் தவறான தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications