திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் திருதிரு 5 பெண்கள்.. கையில் ரூ.50 ஆதார் அட்டை.. யாருனு போய் பார்த்தால்?
திருப்பூர்: 14 வயதுக்கு உட்பட்டவர்களை நிறுவனங்களில் பணி அமர்த்தக்கூடாது.. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோரை பணி அமர்த்துவதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், போலி ஆதார் தயாரித்து, வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு சிறுவர், சிறுமிகள் வேலைக்கு அனுப்பி வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் திருப்பூர் மாவட்டத்தில் இந்த மோசடி பெருகி வருவது அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் போலி ஆதார் அட்டைகள் புழக்கம் அதிகரித்து வருகிறது.. கடந்த ஜனவரி மாதம் போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி தங்கியிருந்த வங்காளதேச இளைஞர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் போலியான ஆதார் அட்டை கொடுத்து தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.. இதுபற்றி தகவல் அறிந்து தீவிரவாத தடுப்பு குழு போலீசார் சோதனையில் ஈடுபட்டு, மொத்தம் 31 பேரை கைது செய்திருந்தனர்.
ரயில்வே ஸ்டேஷன்
அதேபோல, நேற்றைய தினம், கேரளாவின் பெரும்பாவூர் பகுதியில் உள்ள கடையில் போலியான ஆதார் அட்டைகள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாறு வேடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பெரும்பாவூர் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வந்த செல்போன் கடையில், போலி ஆதார் அட்டைகள் அச்சடித்து வழங்கப்படுவதை மாறுவேடத்திலேயே கண்டுபிடித்தனர். பிறகு திடீரென போலீசார் அந்த கடையை முற்றுகையிட்டு, போலி ஆதார் அட்டைகள், லேப்டாப்புகள், பிரிண்டர்கள், செல்போன்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர்..
அசாம் போலி ஆதார் அட்டை
அந்த நிறுவனத்தை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதுதான், இவர் ஏற்கனவே பல போலி ஆதார் அட்டைகளை பிரிண்ட் செய்து வழங்கி வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது..
இதையடுத்து, அந்த நிறுவனத்திடமிருந்து போலி ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் உடனடியாக அவற்றை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அந்த ஆதார் அட்டைகளை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருப்பூரில் சிக்கிய 5 சிறுமிகள்
இந்நிலையில் திருப்பூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.. கேரளா செல்லும் ரயிலில், கடந்த 6ம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 சிறுமிகள், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியிருக்கிறார்கள்.. ரயில்வே போலீசார், அந்த 5 சிறுமிகளின் ஆதார் கார்டை வாங்கி பரிசோதித்தனர்..
அப்போது 18 வயது பூர்த்தியானது போன்று பிறந்த தேதி பதிவாகியிருந்தது.. ஆனால், ஆதார் கார்டு க்யூ.ஆர்., கோர்டை ஸ்கேன் செய்தபோது, ஸ்கேன் ஆகவில்லை. இதனால், ரயில்வே போலீசார் தகவல்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், சம்பந்தப்பட்ட 5 சிறுமிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.. அதில், 5 சிறுமிகளின் உண்மையான வயது 16 என்பதும், போலி ஆதார் கார்டு வாயிலாக திருப்பூருக்கு ஜார்க்கண்ட்டிலிருந்து பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது.
50 ரூபாய்க்கு போலி ஆதார் அட்டை
இதையடுத்து, ஜார்க்கண்டலிருந்து, அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் தரப்பட்டு, திருப்பூர் வரவழைக்கப்பட்டனர்.. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது..
ஜார்க்கண்டில் வெறும் 50 ரூபாய்க்கு போலி ஆதார் கார்டு கிடைக்கிறதாம்.. அதாவது, ஒரிஜினல் ஆதாரில், போட்டோஷாப் உதவியுடன், பிறந்த தேதியை மாற்றி, வயதை அதிகரித்து, ஸ்கேன் ஆகாத க்யூ.ஆர்., கோடு இணைத்து, போலி ஆதார் தயாரித்து தருவதாக சிறுமிகளின் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை முடிந்ததும் அனுப்பி வைக்கப்படுவர்
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி சொல்லும்போது, "14 வயதுக்கு உட்பட்டவர்களை நிறுவனங்களில் பணி அமர்த்தக்கூடாது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோரை பணி அமர்த்துவதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால், வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களை, 18 வயது பூர்த்தியானது போல ஆதாரில் மாற்றம் செய்து அனுப்புகின்றனர். அப்படித்தான் ஜார்க்கண்டிலிருந்து திருப்பூரில் பணிபுரிவதற்காக 5 சிறுமிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்த பிறகு பெற்றோருடன், அந்த 5 சிறுமிகளும் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications