திருப்பூர் மாநகரத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.. வரப்போகிறது அவுட்டர் ரிங் ரோடு.. முக்கிய அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. ஒரு வழியாக திருப்பூரை சுற்றி வெளிப்புற சுற்றுச் சாலை அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் சுற்றுச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஆலோசனை சேவைகளை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் (TRDC) அறிவித்திருக்கிறது. இது திருப்பூர் மாநகரத்தின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்.
திருப்பூர் மாநகரம் என்பது கோவைக்கு அடுத்தபடியாக கொங்குமண்டலத்தில் உள்ள மிகப்பெரிய நகரமாக இருக்கிறது. ஒருகாலத்தில் பல்லடம் பகுதியில் உள்ள ஒர கிராமமாக இருந்த திருப்பூர் இன்றைக்கு பல்லடம், அவினாசிக்கு தலைநகரமாக இருக்கிறது. திருப்பூரில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை மட்டுமே 3முதல் 4 லட்சம் என்கிற அளவில் இருக்கும் என்கிறார்கள். எங்கு திரும்பினாலும் வடமாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள்.

கோவையை கூட வடமாநிலத்தவர் அதிகம் உள்ள பகுதியாக சொல்லி விட முடியாது. ஆனால் திருப்பூரை நிச்சயம் சொல்லிவிட முடியும். திருப்பூர் மாநகரம் பனியன் தொழிலுக்கு இந்தியாவின் புகழ் பெற்ற நகரமாக இருக்கிறது. டாலர் சிட்டி என்று போற்றப்படும் திருப்பூரை தலைமையிடமாக கொண்ட நிறுவனங்கள் தான் ஜவுளி, பனியன் மற்றும் உள்ளாடைகள், வேஷ்டி, சட்டை தயாரிப்பில் முன்னணியில் உள்ளன. மொத்த இந்தியாவிற்கும் உள்ளாடைகள் உற்பத்தி செய்து தரும் நகரமாக திருப்பூர் இருக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை திரும்பிய பக்கம் எல்லாம் பனியன் நிறுவனங்கள் உள்ளன. மிகப்பெரிய நிறுவனங்களே ஆயிரக்கணக்கில் உள்ளன. சிறு குறு நிறுவனங்களை எல்லாம் சேர்த்தால் பல ஆயிரம் என்கிற அளவில் உள்ளன.
சென்னை, கோவைக்கு ஒருவர் முதல்முறையாக எந்த தொழிலும் தெரியாமல் போகிறார் என்றால் பிழைப்பது கடினம்.. கொஞ்சம் சிரமப்பட வேண்டியதிருக்கும்.. ஆனால் திருப்பூரில் அப்படி இல்லை.. எந்த தொழிலும் தெரியாவிட்டாலும், கையில் ஒரு ரூபாய் கூட பணமே இல்லாவிட்டாலும், வேலையும் கொடுத்து தங்க இடமும் கொடுத்து, சாப்பாடும் கொடுத்து அவர்களை தொழில் அதிபராக்கிவிடும்.. அப்படி திருப்பூரில் தொழில் அதிபர் ஆனவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம்.. அதனால் தான் பலர் திருப்பூருக்கு வேலை தேடி வருகிறார்கள்.

இப்படி வருபவர்கள், வந்து கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை காரணமாக திருப்பூர் மாநகரின் பரப்பளவு பல்லடத்திற்கு பக்கத்திலும். அந்தபக்கம் அவினாசி வரையிலும், இன்னொரு பக்கம் ஊத்துக்குளி வரையிலும், பெருமாநல்லூர் வரையிலும், தாராபுரம் சாலையில் கொடுவாய் வரையிலும், சோமனூர் சாலையில் மங்கலம் வரையிலும் வளர்ந்துள்ளது.
திருப்பூர் மாநகரில் புறநகர் பகுதிகள் என்று சொல்லும் அளவிற்கு பல்லடம், மங்கலம்,அவினாசி, பெருமாநல்லூர், ஊத்துக்குளி, கொடுவாய் ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளுக்கு அப்படியே நடுவில் தான் திருப்பூர் மாநகரம் உள்ளது. திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அங்கு அவுட்டர் ரிங் ரோடு அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. அந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன்படி திருப்பூரில் விரைவில் வெளிவட்டசாலை அமைக்கப்பட உள்ளது. திருப்பூர் சுற்றுச் சாலைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஆலோசனை சேவைகளை நியமிப்பதற்கான டெண்டர்களை தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் (TRDC) அறிவித்திருக்கிறது. இது திருப்பூர் மாநகரத்திற்கு எளிதாக மக்கள் சென்றுவரவும், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்.












Click it and Unblock the Notifications