கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அவசரமாக போன விவசாயி.. அதென்ன கையில்?,திகைத்த திருப்பூரில் விஏஓ ஆபீஸ்
திருப்பூர்: கால்நடை விவசாயிகள் தங்களது இறந்துபோன ஆடுகளுக்கு நிவாரணம் கோரி, போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட விவசாயி ஒருவர் செய்த காரியம், பலருக்கும் வியப்பையும், திகைப்பையும், பரபரப்பையும் தந்து கொண்டிருக்கிறது.
சமீபகாலமாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் திருட்டு பெருகி வருகிறது. முக்கியமாக, ஆடுகளை குறி வைத்தே அதிக திருட்டு நடந்து வருகிறது. தென்மாவட்டங்களில், மழை பொய்த்து விடும் சமயங்களில், ஏராளமான விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள்.

ஆடுகளுக்கு மட்டும் குறி
ஆனால், இந்த ஆடுகளையும் சிலர் குறி வைத்து திருடிவிடுவதாக போலீசில் கண்ணீர் மல்க புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறார்கள். எந்தெந்த பகுதியில் ஆடுகள் உள்ளன? எவ்வளவு ஆடுகள் இருக்கின்றன? எங்கே கட்டி வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் முன்கூட்டியே மர்மநபர்கள் நோட்டமிட்டு சென்றுவிடுகிறார்களாம்.. பிறகு, நேரம் பார்த்து, இதற்காகவே பெரிய ரக கார்களை நள்ளிரவில் கொண்டுவந்து, அதில் ஆடுகளை கடத்தி கொண்டு போவதாக விவசாயிகள் புகார் சொல்கிறார்கள்.
சிலசமயம், திருடும்போது ஆடுகள் கத்தி கூச்சலிட நேரிடுகிறது. இந்த சத்தம் கேட்டு விழித்து கொள்ளும் உரிமையாளர்கள், தங்கள் ஆடுகளை மீட்க போராடினால், அந்த மர்மநபர்கள், உரிமையாளர்களை கொடூரமாக தாக்கிவிடுகிறார்கள்..
வாயில் பிளாஸ்திரி
சிலசமயம், ஆடுகள் கத்தி கூச்சலிட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, ஆடுகளின் வாயில் பிளாஸ்திரி ஒட்டிவிட்டு தூக்கி செல்கிறார்களாம். அந்தவகையில், கால்நடை திருட்டு குறித்த புகார்களும் காவல் நிலையங்களில் குவிந்து வருகிறது.
அதிலும் திருப்பூர் மாவட்டத்தில் இந்த புகார் அதிகமாகவே உள்ளது.. வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களால் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.. எனவே, பலியாகும் தங்களது ஆடுகளுக்கு, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தோட்டத்து பட்டியில் 12 ஆடுகள்
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு திகைப்பூட்டும் சம்பவம் நடந்துள்ளது.. வெள்ளகோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், சிறுக்களஞ்சி கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார்..
இவர் தன்னுடைய தோட்டத்து பட்டியில் சில ஆடுகளை வளர்த்து வருகிறார்.. இந்த ஆடுகளில், 12 ஆடுகளை நாய்கள் கடித்துவிட்டன.. இதில், 2 ஆடுகள் உடம்பில் விஷம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தன.
விஏஓ ஆபீசில் ஆச்சரியம் - பரபரப்பு
இதைப்பார்த்து அதிர்ச்சியுற்ற விவசாயி, காயமடைந்த ஆடுகளை, அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.. மிச்சமுள்ள இந்த ஆடுகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரினார்.. மேலும், அந்த ஆடுகளை எல்லாம், பாதுகாப்பாக வளர்த்து தரும்படி சொல்லி, அங்கேயே விட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.. தன்னுடைய ஆடுகளை பாதுகாப்பாக வளர்த்து தரும்படி, விஏஓ அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications