திருப்பூரில் காத்திருந்த பெண்.. ஒவ்வொரு முறையும் செய்யப்பட்ட அலங்காரம்.. கடைசியில இப்படியா முடியணும்
திருப்பூர்: திருமணம் நடக்காத ஏக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருந்தார். அதுபோல கடந்த வாரமும் இப்படியொரு துயர சம்பவம் மதுரையில் நடந்தது.. இப்போது திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது திருப்பூரில்?
சமீபத்தில் கும்பகோணத்தில் திருமணமாகாத ஏக்கத்தில் விஷம் குடித்த இரட்டையர் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது..

கும்பகோணம் காமாட்சி ஜோதிடர் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (60), கூலித் தொழிலாளியான இவருக்கு பாமா (34), ருக்மணி (34) என்ற இரட்டையர் மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், 34 வயதாகியும் தங்களுக்கு இன்னும் திருமணமாகாததால் இரட்டையர் சகோதரிகளும் வருத்தத்திலும், கவலையிலும் இருந்து வந்துள்ளனர்.
சகோதரிகள் வருத்தம்
இதனால் மனவேதனையடைந்த சகோதரிகள் இருவருமே வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்..
சம்பவத்தன்று விஷம் அருந்தி வீட்டிற்குள் மயங்கிக் கிடந்த இருவரையும் உறவினர்கள், மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் 2 பேருமே சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சம்பவம் அப்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
திருப்பூர் பெண்
இந்நிலையில், நேற்றைய தினம், திருப்பூர் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்த பெண்ணின் பெயர் ராஜ்மதி.. 25 வயதாகிறது.. கடந்த சில வருடங்களாக திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. இதற்காக வித்யாலயம் அடுத்த பாரதி நகரில் தங்கியிருக்கிறார்..
இவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.. இதற்காக வரன்களை பார்க்க துவங்கினார்கள்.. அதன்படியே ஒவ்வொரு மாப்பிள்ளையும், ராஜ்மதியை பெண் பார்க்க வந்தார்கள்.. மாப்பிள்ளை வீட்டார் வரும்போதெல்லாம் ராஜ்மதி தன்னை அலங்காரம் செய்து காத்திருப்பார்...
விரக்தியில் கவலை
மாப்பிள்ளை வீட்டினரும், பெண்ணை பார்த்துவிட்டு செல்வார்களே தவிர, சம்மதம் சொல்வதேயில்லை. யாராவது ஒரு மாப்பிள்ளை தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார்களா என்று ராஜ்மதி காத்திருந்தும், கடைசிவரை அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.. ஒவ்வொரு முறையும் பெண் பார்க்க வரும்போதெல்லாம், ஏமாந்து போவதால், விரக்திக்கு ஆளானார் ராஜ்மதி..
தன் வயதுடைய பெண்கள் குழந்தை, குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்களே என்று ராஜ்மதி மிகுந்த கவலைக்கும் ஆளானார்..
கடைசியில் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்தது.. இதுகுறித்து தகவலறிந்த மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜ்மதியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications