கூட்டுறவு வங்கியில் சிபில் ரிப்போர்ட் பார்த்து கடன் வழங்குமாறு சுற்றறிக்கை.. விவசாயிகள் எதிர்ப்பு
திருப்பூர்: கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற சிபில் ரிப்போர்ட் பார்த்து வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர். கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் சிபில் ரிப்போர்டில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

சிபில் ரிப்போர்ட்
அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் மாநில பதிவாளர், விவசாயிகள் கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெறுவதற்கு விவசாயிகளின் சிபில் ரிப்போர்ட் பார்த்து மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசு கணக்கிட்டு வைத்துள்ள உற்பத்தி செலவின் அடிப்படையில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த பயிர்க்கடன் இரண்டு மடங்கு குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லாபம் பெற முடியவில்லை
மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகளை தவிர, தமிழ்நாடு விவசாயிகள் விவசாயத்தில் இருந்து லாபம் பெற முடியவில்லை. பயிர் கடனை கூட திருப்பி செலுத்த முடியாததால் அவ்வப்போது மாநில அரசும், கூட்டுறவு பயிர்கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது.
விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாது
கூட்டுறவு சங்கங்கள் மட்டுமே விவசாயிகளின் புகலிடமாக இருந்தது. இனிமேல் கூட்டுறவு சங்கங்களில் பெறப்படும் கடன்களும் சிபில் ரிப்போர்டில் பதிவேற்றம் செய்யப்படும். அவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இனி விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
விவசாய கடன்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சிபில் ரிப்போர்ட்டில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்தநிலையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதற்கு சிபில் ரிப்போர்ட் பார்க்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களுக்கு சுற்றறிக்கை செய்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளுக்கு எச்சரிக்கை
இதுபோன்ற பிரச்சினை மகாராஷ்டிரா மாநிலத்தில் எழுந்தபோது அங்குள்ள முதல்வர் சிபில் ரிப்போர்ட் வைத்து கடன் கொடுப்பதை நிராகரிப்பது தவறு என்றும், வங்கிகள் அவ்வாறு செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இதுபோல் தமிழக முதல்-அமைச்சரும் தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான கூட்டுறவு துறையின் இந்த சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்" இவ்வாறு விவசாயிகள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
கூட்டுறவு துறை விளக்கம்
இதனிடையே சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்தள்ளது. இதர வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காவும், ஏற்கனவே நிறைய கடன் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவுமே சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் என்று கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே நிறைய கடன் நிலுவையில் உள்ளளவர்கள், ஏற்கனவே வேறு வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் பயிர்க்கடன் பெறுவது இனி சிரமமாக இருக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications