தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்காதது ஏன் தெரியுமா..? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்!
திருப்பூர் : ஏன் தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்கவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசுகையில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரத்த பேதத்துக்கும், பால் பேதத்துக்கும் எதிரானது திராவிடம். எவரையும் உயர்த்தும் தாழ்த்தும் வன்மத்துக்கு எதிரானது திராவிடம் எனக் கூறியுள்ளார்.

நாணயத்தின் 2 பக்கங்கள்
சிபிஐ மாநில மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல திராவிட மாடல் அரசின் இரண்டு பக்கங்கள் வளர்ச்சித் திட்டங்களும், சமூக மேம்பாடும். இரண்டில் ஒன்று இருந்து - இன்னொன்று இல்லாவிட்டால் அந்த நாணயம் செல்லாது. அதைப் போலத் தான் வளர்ச்சித் திட்டம் மட்டும் இருந்து சமூக மேம்பாடு இல்லாமல் போயிவிட்டால் அதனாலும் எந்தப் பயனும் இல்லை. அதனை மனதில் வைத்துத்தான் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

திராவிட மாடல் என்பது என்ன?
மதவாதத்துக்கு எதிரானது திராவிடம். சாதியவாதத்துக்கு எதிரானது திராவிடம். சனாதனத்துக்கு எதிரானது திராவிடம். வர்ணத்துக்கு எதிரானது திராவிடம். ரத்த பேதத்துக்கும், பால் பேதத்துக்கும் எதிரானது திராவிடம். எவரையும் உயர்த்தும் தாழ்த்தும் வன்மத்துக்கு எதிரானது திராவிடம். யாரையும் பிரித்துப் பார்க்கும் வஞ்சகத்துக்கு எதிரானது திராவிடம். எனவே தான் திராவிட மாடல் என்று ஆட்சியின் கொள்கையை வடிவமைத்துள்ளோம்.

ஏன் தமிழ்நாடு மாடல் இல்லை?
திராவிட மாடல் என்று பெயர் வைத்துள்ளீர்களே, இதற்கு ஏன் தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு என்றால் அது இடத்தைக் குறிக்கும். ஆனால் திராவிடம் என்று சொன்னால்தான் அது ஒரு கொள்கையை கோட்பாட்டைக் குறிக்கும்." எனத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இரண்டுமே மக்களுக்கு எதிரானவை
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இந்திய நாட்டுக்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்று சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது. மற்றொன்று, மாநிலங்களின் உரிமைகளைச் சிதைப்பது. இரண்டுமே மக்களுக்கு எதிரானவை. பல்வேறு இனம், மொழி,மதம், கலாச்சார, பண்பாட்டு மாறுபாடுகளைக் கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான குறிக்கோளுடன் வாழ்கிறோம்.

சிலர் விரும்பவில்லை
அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை. அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகள். அனைத்து மதத்தவர்க்கும் சமமான வழிபாட்டு விருப்பங்கள். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்து இருந்தாலும் - அண்டை மாநிலங்களோடு நட்புறவு என அமைதியாக இந்தியா இருப்பதை சிலர் விரும்பவில்லை. இதனைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய சக்திகள் தான் தேச விரோத சக்திகள். இவர்கள் நம்மைப் பார்த்து தேசவிரோதிகள் என்று சொல்வது தான் வேடிக்கை.
Recommended Video

இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி
அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள், அனைத்து மொழிகளையும் ஒன்றாக மதியுங்கள், அனைத்து இனங்களுக்கும் உரிமைகள் தாருங்கள், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களது வழிபாட்டு உரிமையிலும் தலையிடாதீர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சொல்வது தேச விரோதமா? ஒரே மதம் ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேச விரோதமா? இந்தியா முழுக்க இன்று கேட்க வேண்டிய கேள்வி இது மட்டும் தான்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications