ஸ்ரீரங்கத்தில் மோடிக்கு ஆசி வழங்கிய ஆண்டாள் யானை.. மவுத் ஆர்கன் வாசித்து அசத்தல்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு கோயில் யானை ஆண்டாள் ஆசி வழங்கியதோடு மவுத் ஆர்கன் வாசித்து காட்டி ஆச்சரியப்படுத்தியது.
மகாவிஷ்ணுவின் 108 வைணவ திவ்யதேசத் தலங்களில் முதன்மையானது என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாள் ஆகியோருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது பூபதி திருநாள் நடைபெற்று வருகிறது.

இந்த கோயிலில் உற்சவங்கள் மற்றும் பெருமாள், தாயார் புறப்பாடுகளுக்கு ஆண்டாள் என்ற பெண் யானை பயன்படுத்தப்படுகிறது. தற்போது 45 வயதாகும் ஆண்டாள் யானை மிகவும் புத்திசாலித்தனமானது. இந்த யானை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கு வயது 8. இந்த யானை கடந்த 37 ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகிறது.
அதிகாலையில் பெருமாள் ஆண்டாளுக்குதான் முதல் தரிசனம் தருவார். முதல் பிரசாதமும் ஆண்டாளுக்குதான் கொடுக்கப்படும்.
கோயில் ஊழியர்களும், ஊர்மக்களும் ஆண்டாளை செல்லப்பிள்ளையாக பாவித்து பேசுவார்கள். பாகன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிப்பாள் ஆண்டாள். இன்றைய தினம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு ஆசி வழங்கிய ஆண்டாள் யானை, மவுத் ஆர்கான் வாசித்து அசத்தியது.
அயோத்தியில் நாளை மறுநாள் 22ஆம் தேதி திங்கட்கிழமை ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற இருக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார். அந்தவகையில் ராமபிரானின் குல தெய்வமாக போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்த மோடி புகழ் பெற்ற கம்பராமாயணம் மண்டபத்திற்கு சென்றார். அங்கு கம்பராமாயணத்தை ரசித்து கேட்டார். அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார்.
ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளின் அருகில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார். அப்போது யானைப் பாகன், ஆண்டாள் யானையிடம் மவுத் ஆர்கன் கொடுத்த போது அதனை மோடிக்கு வாசித்துக் காட்டியது. மோடி மெய்மறந்து ஆண்டாள் யானையின் இசையை ரசித்துக் கேட்டார். அதன் தும்பிக்கையை தடவிக்கொடுத்தபடி மோடி தனது அன்பை வெளிப்படுத்தினார்.
சாமி தரிசனத்தின் போது பிரதமர் தமிழ் கலாச்சார உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார். பிரதமரின் சாமி தரிசனத்தை முன்னிட்டு பகல் 2.30 மணி வரை பொது மக்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 1947 இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஜவகர்லால் நேரு தொடங்கி தற்போதைய நரேந்திர மோடி வரை 15 பேர் பிரதமராக பதவி வகித்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்ததில்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்த முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மோடி.
ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி விட்டு கோவில் வளாகத்தில் இருந்த 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி விட்டு பின்னர் ராமநாதசுவாமியை வழிபட்டார். பிரதமரின் வருகையை ஒட்டி ஸ்ரீரங்கத்திலும், ராமேஸ்வரத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications