திருச்சியில் ஆவின் பால் சப்ளையில் பாதிப்பா? பால் உற்பத்தியாளர் யூனியன் விளக்கம்.. மக்கள் ‛ஹேப்பி’
திருச்சி: திருச்சியில் பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகம் செய்யும் வாகனங்களின் ஒப்பந்தாரர்கள் வாடகை பாக்கியால் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் தான் அந்த தகவலை திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் மறுத்துள்ளதோடு, பொதுமக்களுக்கு குட்நியூஸ் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியனில் இருந்து பால்விநியோக வாகனங்கள் மூலம் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பால் விநியோக வாகனத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு 4 மாதம் வாடகை பாக்கி உள்ளதாகவும், அதனால் அவர்கள் வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் திருச்சி மாவட்டத்தில் சில இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பால் விநியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் கவலையடைந்தனர்.
இந்நிலையில் தான் திருச்சி மாவட்டத்தில் பால் சப்ளையில் பாதிப்பு உள்ளதா? என்பது பற்றி திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்த யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (யூனியன்) இன்று 29.05.2024 பால் விநியோக வழித்தட வாகன ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வாடகை தொகையினை வழங்கவில்லை எனவும், அதனால் பால் விநியோக வழித்தட வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், உண்மைக்கு புறம்பான பொய்யான பரப்புரைகள் திருச்சி ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வருகின்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் நாள் ஒன்றுக்கு 4.50 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் 1.50 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக தயார் செய்து உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 3 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
பால் வழங்கும் விவசாயிகளுக்கு பால்பணம் தங்கு தடையின்றி 10 தினங்களுக்கு ஒருமுறை நிலுவையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. கேன்பால் ஏற்றி வரும் பால் சேகரிப்பு ஒப்பந்த வாகனங்கள், பால் குளிர்வூட்டு நிலையங்களில் பால் சேகரிக்கும் ஒப்பந்த டேங்கர் வாகனங்கள் மற்றும் பால் பாக்கெட் விநியோகம் செய்யும் ஒப்பந்த வாகனங்கள் ஆகியவற்றிற்கான வண்டி வாடகை தொகை 15 தினங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகின்றது.
பால் பாக்கெட் விநியோகத்தினை நெறிப்படுத்தும் வண்ணம் பகல் நேரங்களில் பெண் அலுவலர்கள் கொண்ட குழுவும், இரவில் ஆண் அலுவலர்கள் கொண்ட குழுவும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டு பால் விநியோக வழித்தட வாகனங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஒன்றிய நலன் பேணப்பட்டு வருகிறது. மேலும் பால் விற்பனை வழித்தட வாகன ஒப்பந்தாரருக்கரிய வாடகை தொகை 15 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மாத பட்டியல் தொகையினை நிலுவையில் வைத்து அனுமதிக்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தான் இன்று ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்த செய்திகளில் விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வடகை தொகை அனுமதிக்கப்படவில்லை என்பது பொய்யான பரப்புரையாகும். ஒரு மாதம் மட்டுமே விற்பனை வழித்தட வாகன ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வாடகை தொகை நிலுவையில் உள்ளது.
மேலும் வகன ஒப்பந்ததாரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி வாகனங்கள் இயக்கப்பட்டுள்ளன. எனவே பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் உண்மைக்கு மாறான செய்திகள் வதந்திகள் திருச்சி ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது. இதனை திருச்சி ஆவின் நிர்வாகம் மறுக்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications