நடிகர் மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதி
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.. சந்தையில் சென்று மக்களை சந்திப்பது. சந்தையில் காய்கறி வாங்குவது, வீடுகளில் சென்று அமர்ந்து பேசுவது என்று இயல்பாக பேசி வாக்கு சேகரித்து வந்தார். இந்நிலையில் திடீரென மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
திருச்சி லால்குடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த சில நாளிலேயே ரயில் நிலையத்துக்குள் சென்று, கல்லக்குடி என்ற பெயர்ப்பலகை முன்பு ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அந்நேரத்தில் அந்த தடத்தில் ரயில் எதுவும் வரவில்லை. இதுபற்றி அப்போது மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் அப்போது கூறும் போது, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆகியோரை சந்தித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். இருவரும் தராததால் இங்கு சுயேச்சையாக போட்டியிடுகிறேன் என்றார்.
இதனிடையே மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களாகவே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் கல்லக்குடி ஊரணியில் பெண்களின் துணியை துவைத்து கொடுத்து வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான், தன்னை வெற்றி பெற செய்தால் விவசாயிகளின் கனவான வாழை கொள்முதல் நிலையம், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என உறுதியளித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் மன்சூர் அலிகான் போட்டியிட்டார். திண்டுக்கல்லில் மக்களோடு மக்களாக அவர் பேசுவது அவர்களை வெகுவாக ஈர்த்தது. சைக்கிளில் ரவுண்டு அடித்தபடியே ஓட்டு கேட்டார். பிறகு கையில் கிளவுஸ் கூட இல்லாமல் தெருவை சுத்தம் செய்து குப்பையை அள்ளி கவனத்தை ஈர்த்தார்.
பிறகு அந்த குப்பை வண்டியை ஓட்டி கொண்டு சென்றார். அம்மிக்கல்லில் சட்னி அரைத்து கொடுத்து பெண்களுக்கு உதவினார். அந்த வழியாக கீரை விற்கும் பெண்கள் சென்றாலோ, அல்லது காய்கறிகள் விற்கும் பாட்டிகள் சென்றாலோ, மனசார உரையாடினார். இப்படி பல வகையில் ஓட்டு கேட்டார். ஆனால் மன்சூர் அலிகான் அப்போது ஜெயிக்கவில்லை..
எனினும் மனம் தளராமல் லால்குடி சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். கடும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென மன்சூர் அலிகானுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications