துரோகம் செய்தது யார்?.. எடப்பாடி பழனிசாமிக்கு குறும்படம் போட்ட டி.டி.வி தினகரன்
திருச்சி: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். அதிமுகவில் உள்கட்சி பூசல், கூட்டணியில் குழப்பம் போன்ற பஞ்சாயத்துகள் அதிகரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன், டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தினகரன் எடப்பாடி பழனிசாமி பாணியில் பழைய வீடியோ குறும்படம் போட்டு காண்பித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், "ஆர்கேநகர் இடைத்தேர்தலில் நான் முதல்முறையாக தொப்பி சின்னத்தில் நின்றபோது பழனிசாமி எனக்காக ஓட்டு கேட்டார். பொதுவாக ஓட்டு கேட்கும்போது இவர் நல்லவர், வல்லவர், அம்மாவின் தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மா விட்டு சென்ற பணிகளை நிறைவேற்ற இவருக்கு வாக்களியுங்கள் என்று தானே கேட்பார்.

எடப்பாடிக்கு குறும்படம்
அதையெல்லாம் தாண்டி அப்போது அவர் கூறினார். அவர் ஸ்டைலில் அந்த வீடியோவை காண்பிக்கிறேன்." என்று டேபில் ஒரு வீடியோ போட்டு காண்பித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "இதயதெய்வம் அம்மா சட்டமன்றத்தில் பேசும்போது எனக்கு பின்னால் அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சி தொடரும் என்று குறிப்பிட்டார். அந்த செய்தியை நினைவாக்கும் நேரம் இது. அம்மாவின் வாக்கு வேத வாக்கு.
அந்த வேத வாக்கை நாம் அத்தனை பேரும் ஒருமித்த கருத்தோடு, அண்ணன் டிடிவி தினகரனை வெற்றி பெற வைத்து அம்மாவுக்கு நன்றி செலுத்த வேண்டும்." என்றார். மீண்டும் தொடர்ந்த தினகரன், "இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் சொல்லுங்கள். டிடிவி தினகரன் என்று கூட அவருக்கு சொல்ல தெரியவில்லை. அதாவது அண்ணன், சந்திரன், இந்திரன் என்றெல்லாம் சொல்வார்கள். அதைக் கூட இவர் தவறாக சொல்கிறார்.
துரோகம் செய்தது யார்
அம்மா சட்டமன்றத்தில், இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்த இயக்கம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும். என்றார். அதை சரியாக புரிந்து கொள்ளாமல், இடைத்தேர்தலின்போது வேட்பாளராக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்து நடத்துங்கள் என்கிறார். ஏற்கனவே 122 சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடன் தான் இருக்கிறார்களே. நான் ஜெயிப்பதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம்.
அம்மா சொன்னதை நிறைவேற்ற அண்ணன் டி.டி.வி தினகரன் வந்திருக்கிறார் என்பது தானே அதன் அர்த்தம். 2017 மார்ச் மாதம் அப்படியெல்லாம் என்னை பேசியவர், ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி இவர்கள் ஊர் ஊராக பணம் கொடுத்து ரெய்டில் மாட்டிக் கொண்டார்கள். அதன் பிறகு அந்த தேர்தலையே நிறுத்திவிட்டார்கள். ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாள், தமிழ் வருட பிறப்பு தினம்.
பகீர் குற்றச்சாட்டு
அன்றைக்கு பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் என்னுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அங்கிருந்து 3 நாட்களில் என்னை கட்சியில் இருந்து நீக்குமளவுக்கு நான் என்ன துரோகம் செய்தேன். என்னை நீக்கியதற்காக கோபப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேர், எதற்காக துணைப் பொதுச்செயலாளரை நீக்கியுள்ளீர்கள் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு என்னை நீக்கவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. ஆட்சி அதிகாரம் இருக்காது. என்று மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததால் நீக்கிவிட்டோம் என பழனிசாமி கூறியுள்ளார். அந்த 18 பேரை நான் பிடித்து வைத்துக் கொண்டதாக கூறுகிறீர்களே. அன்றைக்கு ஆட்சி அதிகாரம் உங்களிடம் தான் இருந்தது. அந்த 18 பேரும் சட்டமன்றத்தில் உங்களுக்காக தான் வாக்களித்துள்ளனர்.
அவர்களே தான் எங்களுக்கு பழனிசாமி மீது நம்பிக்கையில்லை. வேறு முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். துரோகம் செய்த பழனிசாமி, சினிமாவில் பெரும் புகழும், வருமானமும் உள்ள விஜய் இவரை தோளில் தூக்கி வைத்து அவருக்காக ஓட்டு கேட்பாரா. அப்படியே கேட்டாலும் தேர்தல் முடிந்த பிறகு அவரை பழனிசாமி காலி செய்வாரா மாட்டாரா." என்றார்












Click it and Unblock the Notifications