பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த மீட்டிங்.. ஆலோசித்தது என்ன?
திருச்சி: தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பின்னர் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்த பிறகு முதல் முறையாக மோடி - எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
மாலத்தீவு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடியில் ரூ. 452 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.

எடப்பாடி பழனிசாமி மோடி சந்திப்பு
திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்கும் பிரதமர் மோடி நாளை காலை 11 மணி அளவில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். முன்னதாக இன்று இரவு பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.
திருச்சியில் நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பர்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தமிழ்நாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி?
எடப்பாடி பழனிசாமியுடன் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் பிரதமர் மோடியை சந்தித்தனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜகவினர் கூறி வருவதற்கு அதிமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து வருகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நான் தான் என்றும், அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கு மாறாக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா கூறியதாக பேசினர். இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு தற்போது அடங்கியுள்ள நிலையில், மோடி - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஓ பன்னீர் செல்வத்தை சந்திக்காத மோடி
தமிழகத்தின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவரகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். எனினும், அவருக்கு சந்திக்க நேரம் ஒதுக்கவிலை.
ஓ பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளாரா? என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இத்தகைய சூழலில்தான் அவர் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் ஓ பன்னீர் செல்வத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications