திருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி பிணமாக மீட்பு
திருச்சி: திருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த அக்காள்-தம்பி சடலமாக மீட்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். டாக்சி டிரைவர். இவரது மனைவி அனிதா. இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் தர்ஷினி (6). மகன் நரேன் (4).

ரவிச்சந்திரனும், அனிதாவும் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். அனிதாவின் தாய் தாமரை இருகுழந்தைகளையும் கவனித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதை கழிக்க பெருவளை வாய்க்கால் பகுதிக்குச் சென்றனர்.
பின்னர் கைகால்களை கழுவுவதற்காக வாய்க்காலில் அவர்கள் இறங்கியபோது தவறி தண்ணீரில் விழுந்தனர். இதைப்பார்த்து அந்த பகுதியில் உள்ளவர்கள் சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல்மூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாய்க்காலில் இறங்கி குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் குழந்தையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு விடிய, விடிய குழந்தைகளின் உடல்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை குழந்தைகள் விழுந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே தர்ஷினி, நரேன் ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.












Click it and Unblock the Notifications