கல்லணைக்கு வந்து சேர்ந்தது காவிரி நீர்.. நாளை டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கிறார் அமைச்சர் வினோத்
திருச்சி: மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று கல்லணையை வந்தடைந்தது. டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து நாளை காலை 11 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் வினோத், நீரை திறந்து வைக்கிறார்.
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 1 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. தற்போது வினாடிக்கு 720 கன அடி வீதம் வருகிறது.

இதனையடுத்து நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி பாசனத்திற்காக கல்லணை திறக்கப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் வினோத் நாளை அணையில் நீரை திறந்து வைக்கிறார்.
இதில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், டெல்டா மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மூலம் திறக்கப்படும் தண்ணீரால் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
கல்லணையில் இருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் வழியாக நீர் திறக்கப்படுவது தொடர்பாக டெல்டா விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
