திருச்சிக்கு அழைத்துச் செல்லப்படாத திமுக தொண்டர்கள்.. கூட்டிப்போக வாகனங்கள் வரவில்லை.. ஏன் தெரியுமா?
திருச்சி: பட்டமளிப்பு விழா, விமான நிலையத்தின் 2வது முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க ஒட்டுமொத்த டெல்டா மண்டல பாஜகவினரும் திருச்சியில் குவிந்திருந்ததை காண முடிந்தது.
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலினும் ஒன்றாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டாலும் திமுகவினர் யாரும் பெரிதாக திருச்சியில் திரளவில்லை. திமுகவினரும், பாஜகவினரும் ஒரே நேரத்தில் வந்தால் எங்கே சலசலப்பு ஏதும் ஏற்பட்டுவிடுமோ என பதற்றத்திலேயே இருந்த காவல்துறையினருக்கு இது சற்று நிம்மதியை அளித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல தன்னை வரவேற்க கட்சியினர் பெரியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வர வேண்டும் என முதலமைச்சரும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தான் திமுக ஒன்றியச் செயலாளர்கள், திமுக நகரச் செயலாளர்கள் யாரும் தங்கள் பகுதியிலிருந்து பெரியளவில் கூட்டத்தை திருச்சிக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்காக திரண்ட கூட்டமா இல்லை பிரதமர் மோடியை வரவேற்க திரண்ட கூட்டமா என்ற விவாதத்திற்கும் வழியில்லாமல் செய்யப்பட்டது.
பொதுவாக முதலமைச்சர் திருச்சி வருகிற போதெல்லாம் மாவட்டம் முழுவதும் இருந்து முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வரவேற்க வருவார்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ இன்று ஆரவாரமின்றி அமைதி காத்திருக்கின்றனர்.
இதனிடையே நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் திருச்சி வரும் பிரதமர் மோடிக்கு, மிக பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறது தமிழக பாஜக. அக்கட்சியின் டெல்டா மண்டல முகமாக திகழும் கருப்பு முருகானந்தம் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஒருங்கிணைப்பு குழு இதற்கான வேலைகளை தீவிரமாக செய்திருந்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழம் வரை சாலையின் இரு மருங்கிலும் பாஜகவினர் மோடியை வரவேற்க நின்றதை காண முடிந்தது.
அதேபோல் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இடையே நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதனிடையே தன்னை வரவேற்க வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் நின்று கொண்டிருந்த பாஜக தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி உற்சாகமுடன் பயணித்தார் மோடி.












Click it and Unblock the Notifications