நாங்குநேரி நமக்கே.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்.. உதயநிதி பேச்சால் சலசலப்பு
Recommended Video
திருச்சி: திமுகவின் தேர்தல் வியூகங்கள் தொடர்பாக கூட்டணி கட்சித் தலைவர்களை மேடையில் வைத்துக் கொண்டே அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதே நடிகர் உதயநிதியின் பிரசாரத்தால்தான் என அவரது விசுவாசிகள் கூறி வருகின்றனர். அத்துடன் திமுகவின் மாவட்டங்களில் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இந்துத்துவா எதிர்ப்பு அரசியல்தான் திமுகவுக்கு கை கொடுத்தது என்பதை மறந்துவிட்டு அக்கட்சியினர் உதயநிதியை கொண்டாடுவது கட்சியிலேயே மூத்த நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் திருச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் 'சிறப்பு அழைப்பாளர்' என்கிற தகுதியுடன் உதயநிதியும் பங்கேற்றார். இதில் உதயநிதி பேசிய கருத்துகள் கூட்டணி கட்சித் தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவயது முதல் பிரசாரம்
இக்கூட்டத்தில் தமக்கு கட்சிப் பதவி தரப்படுவது பற்றி பேசிய உதயநிதி, நான் இந்த தேர்தலில் மட்டும் பிரசாரம் செய்யவில்லை. துறைமுகம் தொகுதியில் தாத்தா கருணாநிதி போட்டியிட்ட போதே சிறுவனாக பிரசாரம் செய்தேன். கடந்த தேர்தலில் நண்பர் மகேஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் பிரசாரம் செய்தேன். தற்போதைய தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்திருக்கிறேன். எனக்கு பதவி தரப்போவதாக ஊடகங்கள் எழுதுகின்றன. நான் திமுகவின் கடைகோடி தொண்டனாக மட்டுமே இருக்க விரும்புகிறேன் என்றார்.

எங்களுக்கு நாங்குநேரி
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் குறித்து குறிப்பிட்ட உதயநிதி, இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்றுள்ளார். நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அத்தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும். இதற்கு திருநாவுக்கரசர் பரிந்துரைக்க வேண்டும். அத்தொகுதியில் திமுக வெற்றி பெறும் என கூறினார்.

கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்
மேலும், அடுத்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களில் வென்று சாதனை படைக்க வேண்டும். கூட்டணி கட்சிகளும் நமக்கு தேவை. அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கணிசமான இடங்கள் மட்டும் கொடுத்து திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றார்.

திமுக ஆழம் பார்க்கிறது?
திமுகவில் ஸ்டாலினின் ஒவ்வொரு நகர்வையும் அவரது மருமகன் சபரீசன்தான் தீர்மானிக்கிறார். தற்போதைய உதயநிதியின் பேச்சும், திமுக தலைமையால் திட்டமிடப்பட்டு பேச வைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் மன ஓட்டம் என்ன என்பதை ஆழம்பார்க்கும் வகையில்தான் உதயநிதி இப்படி பேசியிருக்கிறார் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications