"4 + 4 + 2.." திருச்சியில் களைக்கட்டும் பொங்கல் "பரிசு" அரசியல்.. ஆட்டத்தை ஆரம்பத்த கேஎன் நேரு!
திருச்சி: திருச்சியில் ரூ.2,500 மதிப்பிலான 4 பிளேட், 4 டம்ளர்கள், 2 குக்கிங் பேன், ஒரு சட்டை மற்றும் பேண்ட் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசை ஒவ்வொரு வார்டிலும் அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு வார்டிலும் சுமார் 3 ஆயிரம் வீடுகளுக்கு இப்படியான பொங்கல் பரிசை திமுக நிர்வாகிகள் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில், திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் சில பிரச்சனைகளை கொடுத்து வருகிறது. இருந்தாலும் திமுகவினர் களத்தில் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர்கள் மூலமாக அண்டா வழங்கப்பட்டது.

உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் இதனை செய்தனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் ரூ.2,500 மதிப்பிலான பொங்கல் பரிசை திமுகவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்து வருகின்றனர். திருச்சி வடக்கு தொகுதியில் உள்ள 23 வார்டுகளிலும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் இந்த பரிசுப் பொருட்களை கொடுத்து வருகின்றனர்.
ஜனவரி 8ஆம் தேதி முதலே இந்த பொங்கல் பரிசுப் பொருள் அரசியல் தொடங்கிவிட்டது. அந்த பரிசுப் பொருளில் 4 பிளேட், 4 டம்ளர்கள்,. 2 குக்கிங் பேன், ஒரு சட்டை, ஒரு பேண்ட் ஆகியவை அடங்கி இருக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் 3 ஆயிரம் வீடுகளுக்கு இதனை கொடுத்து வருகின்றனர். 23 வார்டிகளிலும் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்.
அந்த பரிசுப்பொருளில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்பி அருண் நேரு ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இது திமுகவினர் என்று அல்லாமல், அனைத்து தரப்பினருக்கும் கொடுத்து வருகின்றனர். எந்த வார்டிலும் பரிசுப்பொருள் இல்லையென்றால், உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்றும் அருண் நேரு உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர்.
ஏற்கனவே தமிழக அரசு ரூ.3 ஆயிரம் பரிசு பணம் கொடுக்கும் சூழலில், அமைச்சர்களும் தங்களின் தொகுதியில் பரிசுப்பொருள் விநியோகத்தை கொடுக்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்றும் பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாகவே கே.என்.நேரு பணிகளை தொடங்கி இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications