பீஸ் பீஸா பறக்குதே.. அரசு பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்.. திருதிருனு முழிக்குது திருச்சி
திருச்சி: திருச்சியில் நடுரோட்டில், அதுவும் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டார்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.. தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது.

பயண சலுகைகள்: குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்று திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயண சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
இதைத்தவிர, அனைத்து கிராம பகுதிகளுக்கும், பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் வழங்கி வருகிறது. ஆனாலும், பழைய பேருந்துகளை புதுப்பித்தலில் இன்னும் முழுமையான பணிகள் முடியவில்லையோ என்ற ஐயம் தோன்றுகிறது.
பராமரிப்புகள்: காரணம், சில பஸ்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவீதியில் நின்றுவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி வருகின்றன. பஸ்களில் நிறைய பழுதுகள் அடிக்கடி ஏற்படுகிறதாம்..
பஸ்ஸின் முகப்புவிளக்கும் அதன் டிம், பிரைட் சுவிட்ஸூம், பின்புற சிவப்பு விளக்கும், இடவலம் பார்க்கும் கண்ணாடிகளும் சரியாக இருந்தாலே, பெரும்பாலான விபத்துகளை நாம் தடுத்துவிட முடியும். ஆனாலும் பழைய பஸ்களை முறையாக பராமரிக்காததால், பஸ்கள் பாதி வழியில் நின்றுவிடும் சூழல் உள்ளதாகவும், சிலசமயம், பஸ் பயணிகளே கீழே இறங்கி பஸ்ஸை தள்ளிசெல்லும் நிலைமை உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
பழைய பஸ்கள்: நிறைய பேருந்துகள் சீர்செய்யப்படாமலேயே இயக்கப்பட்டு வருவதுடன், பஸ் சீட்டுகளில் சேதம், படிக்கெட்டுகளில் ஓட்டை என்று இன்னும் சில குறைபாடுகளும் சொல்லப்படுகின்றன.. இதோ இப்படி பராமரிப்பு இல்லாத பஸ் ஒன்று, இன்றைய தினம் திருச்சியில் சென்றுள்ளது.. என்ன ஆச்சு தெரியுமா?
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி, அந்த அரசு டவுன் பஸ் புறப்பட்டது... இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உட்கார்ந்திருந்தார்கள்.. பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது.
அரசு பஸ்கள்: அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பஸ்ஸின் கண்டக்டர் இருக்கை நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது.. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்... இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்டார்கள்.. இதனால் பதறிப்போன டிரைவரும், உடனே பஸ்சை நிறுத்திவிட்டார்.
பிறகு, ரோட்டில் காயத்துடன் விழுந்து கிடந்த கண்டக்டரை மீட்டு, அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். அதற்கு பிறகு, அந்த பஸ்ஸில் வந்த பயணிகளை, பின்னாடி வந்த இன்னொரு டவுன் பஸ்சில் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்தார் டிரைவர்.
கண்டக்டர்: அதற்கு பிறகு, ரோட்டில் விழுந்த கிடந்த இருக்கையை எடுத்து வந்து, அதே பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு கிளம்பி சென்றுவிட்டார் டிரைவர்.. இதில், கண்டக்டர் ரோட்டில் தூக்கி வீசப்பட்டபோது, அந்த வழியாக வேறு வாகனங்கள் எதுவும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும் என்று பயணிகள் கலங்கிப்போய் சொல்கிறார்கள்.. ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை தந்துவிட்டது.
பொதுமக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு, இனியாகிலும், இது குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேண்டுகோள்: அதேபோல, பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்செல்லும், தனியார் பள்ளி பஸ்களுக்கு ஆய்வுசெய்ய தமிழக அரசு தனிக் குழு அமைத்துள்ளதை போலவே, அரசு பஸ்களுக்கும் தனிக்குழுக்களை அமைத்து, அக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகே, வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்ஸிற்கு தகுதிச்சான்று வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற வேண்டுகோளும் இந்த நேரத்தில் சேர்ந்தே எழுந்துள்ளது..!!












Click it and Unblock the Notifications