திருச்சியில் ஸ்கூட்டியில் வந்த கர்ப்பிணி காவலர்.. இண்டிகேட்டர் போட்டு வந்தும்.. எமனாக மாறிய கார்
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த காவலர் விமலா, நிறைமாத கர்ப்பிணியாவார். இவர் மண்டையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். காவலர் விமலா நேற்று காலை திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே புதுக்கோட்டை சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தில் இண்டிகேட்டர் போட்டு திரும்பினார்.. அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மனைவி விமலா (வயது 28). இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் மண்டையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.இப்போது விமலா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்நிலையில் விமலா தினமும் பள்ளத்துப்பட்டியில் இருந்து தனது ஸ்கூட்டியில், காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்று வருவது வழக்கமாகும். அதேபோல் விமலா நேற்று காலை வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டியில் புறப்பட்டு மண்டையூரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

நேற்று காலை 9.30 மணியளவில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் அருகே திருச்சி-புதுக்கோட்டை சாலையை கடக்க முயன்றார். அதற்காக ஸ்கூட்டரில் இன்டிகேட்டரை போட்டுக்கொண்டு சாலையின் இருபுறமும் வரும் வாகனங்களை பார்த்தவாறு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த வெனின்ராஜ் (30) என்பவரின் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பெண் போலீஸ் விமலா படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தி வெனின்ராஜ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பணிக்கு வரும் போது விபத்தில் உயிரிழந்த காவலர் விமலாவின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணிப்புரிந்துவந்த விமலா (வயது 28) பணி நிமித்தமாக புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்புறமாக வந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் பெண் காவலர் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். பெண் காவலர் விமலா உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
விமலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" இவ்வாறு அவர் கூறியள்ளார்.












Click it and Unblock the Notifications