படித்தது பி.ஏ.. தொழில் திருடுவது! பிரபல கொள்ளையனை கைது செய்த திருச்சி பெண் இன்ஸ்பெக்டர்!
திருச்சி: பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியான மின்னல் மணியை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கைது செய்து பல நூறு சவரன் நகைகளை மீட்டிருக்கிறார் திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் ஷியாமளா.
சென்னையிலிருந்து மாதந்தோறும் திருடுவதற்காகவே திருச்சிக்கு வந்து சென்ற மின்னல் மணி மீது கொலை முயற்சி உள்ளிட்ட இன்னும் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.
இதனிடையே திருச்சி மாநகர ஆணையர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி மாநகர் தென் மண்டல காவல் இணை ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர் வகுத்த வியூகத்தின் அடிப்படையில் மின்னல் மணியை கைது செய்திருக்கிறார் பெண் இன்ஸ்பெக்டர் ஷியாமளா.

பிரபல கொள்ளையன்
மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்ற மின்னல் மணி பி.ஏ. படித்துவிட்டு வெல்டிங் தொழில் செய்து வந்திருக்கிறார். அப்போது அங்கு மாமூல் கேட்டு வந்த ஒருவரை மின்னல் மணி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார் மதுரை சிறையில் அடைக்க முற்பட்ட போது அங்கு இடமில்லாத காரணத்தால் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு பிரபல ரவுடி வெள்ளை ரவிடியின் தொடர்பு கிடைக்க பிறகு வெள்ளை ரவியின் கூட்டாளியாக மாறியிருக்கிறார் மின்னல் மணி.

வெள்ளை ரவி
இதையடுத்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மின்னல் மணி, தனது கூட்டாளி வெள்ளை ரவி என்கவுண்டர் செய்யப்பட்ட பிறகு கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார். சென்னையில் குடியிருக்கும் மின்னல் மணி கொள்ளையடிப்பதற்காகவே மாதந்தோறும் திருச்சிக்கு வந்து சென்றிருக்கிறார்.

திருச்சியில் திருட்டு
திருச்சி கிரப்பட்டி, கருமண்டபம் பகுதியில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த மின்னல் மணியை பிடிக்க திருச்சி மாநகர் காவல் ஆணையர் கார்த்திகேயன் மற்றும் திருச்சி மாநகர் தென் மண்டல காவல் இணை ஆணையர் ஸ்ரீதேவி பெண் இன்ஸ்பெக்டர் ஷியாமளா தேவி தலைமையில் தனிக்குழுவை அமைத்து வியூகம் அமைத்துக் கொடுத்திருக்கின்றனர்.

நகைகள் மீட்பு
அதனடிப்படையில் ரயில் ஏறி வந்து திருச்சியில் திருடிவிட்டு அந்த நகைகளை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மின்னல் மணியை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கைது செய்துள்ளார் பெண் இன்ஸ்பெக்டர் ஷியமளா. மேலும், அவரிடம் இருந்து திருச்சியில் பல்வேறு வீடுகளில் திருடப்பட்ட பல நூறு சவரன் நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மின்னல் மணி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications