தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சதமடித்த வெயில்... டெல்லியில் வெப்ப அலையால் மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக வெப்பம் பதிவாகியுள்ளது.
திருச்சி: தமிழகத்தின் 6 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. சுட்டெரித்த வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் வெப்ப அலை வீசக்கூடும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவாகிறது.
தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் பல ஊர்களில் பூமி குளிர மழை பெய்தது. அதனால், தென் மாவட்டங்களில் பல இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
அக்னி நட்சத்திர காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதால் மீண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஆறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

திருச்சியில் சுட்டெரித்த வெயில்
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் அதிபட்சமாக திருச்சியில் 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது 102.7 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். திருத்தணியின் 39 டிகிரி செல்சியஸ் அதாவது 102.2 ஃபாரன்ஹீட், வேலூரில் 38.7 டிகிரி செல்சியஸ் 101.6 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, மதுரையில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது இது 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும். தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் அதாவது 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும்.

டெல்லியில் சுட்டெரிக்கும் வெப்பம்
தலைநகர் டெல்லியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்து வருகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். குளிர்பானங்கள், பழச்சாறு உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இன்று வெப்பத்தின் தாக்கம் 44 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை
வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அத்தியாவசியத் தேவைக்காக வெளியே செல்ல நேரிட்டால், குடை வைத்துக் கொள்ளவும், தொப்பி, கருப்புக்கண்ணாடி உள்ளிட்டவற்றை அணிந்து கொள்ளவும் எனவும் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடுமையான வெப்ப அலை
ஏப்ரல் 21, 2017 அன்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 43.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. அதுபோல டெல்லியின் மிக அதிகபட்ச வெப்பநிலை என்றால் அது ஏப்ரல் 29, 1941 அன்று பதிவான 45.6 டிகிரி செல்சியஸ் ஆகும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவோ அல்லது இயல்பை விட 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகும்போது வெப்ப அலை அறிவிக்கப்படுகிறது. மேலும், இயல்பான வெப்பநிலையில் இருந்து 6.4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் கடுமையான வெப்ப அலை என்று அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications