சிக்னலில் காத்திருப்பதும் சுகமாகுமே.. இளையராஜாவின் இசை மழையில் நனைந்தால்!.. போலீஸாரின் புது முயற்சி!
திருச்சி: திருச்சி மாநகர போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் ரிலாக்ஸாக பயணிக்க இளையராஜாவின் இதமான இசை ஒலிக்கப்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.
Recommended Video
சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் அடித்து பிடித்து வேலைக்கு செல்வது பெரிய வேலையாக இருக்கும். அப்படியே சென்றாலும் டிராபிக் எனும் பிரச்சினை பலருக்கு எரிச்சலை கொடுக்கும்.
டிராபிக்கில் பலர் 5 நிமிடங்கள் போன் பேசுவர். வாட்ஸ் ஆப், பேஸ்புக் கணக்குகளை செக் செய்வர். இது போன்ற டிராபிக் ஜாம்களால் பெரிய மாநகரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சிவப்பு விளக்கு
மேலும் பச்சை விளக்கு எரிந்தால் வாகனங்கள் செல்வது, சிவப்பு எரிந்தால் நிற்க வேண்டும். மஞ்சள் எரிந்தால் விரைவில் சிவப்பு விளக்கு விழ போகிறது, அதனால் எச்சரிக்கையாக வேகத்தை குறைத்துவிட வேண்டும் என்பதுதான் இந்த போக்குவரத்து விளக்கு விதிகளாகும். ஆனால் இன்று பலர் மஞ்சள் விழும்போதே அசுர வேகத்தில் சாலைகளை கடந்து கொண்டிருக்கிறார்கள்.

சிவப்பு சிக்னல்
சிவப்பு விழுந்தாலும் ஒரு சிலர் போலீஸார் இருக்கிறார்களா என சுற்றி முற்றி பார்ப்பர். இல்லாவிட்டால் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்கு பயணிப்பர். இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் உள்பட இரு சக்கர வாகனங்கள் கூட டிராபிக் விதிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் எத்தனையோ விபத்துகள் ஏற்படுகின்றன.

இளைஞர் கூட்டம்
டிராபிக்கில் காத்திருப்பதுதான் மக்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க சிக்னல்களில் எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்திவிடுகிறது போக்குவரத்து காவல்துறை. ஆனால் சிக்னல்களில் இளைஞர் கூட்டத்தை நிற்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பதே உண்மை. இதனால் மக்கள் ரிலாக்ஸாக பயணிக்கவும் போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் திருச்சி மாநகர போக்குவரத்து போலீஸார் ஒரு புதிய முயற்சியை கையிலெடுத்துள்ளனர்.

ஒழுங்குப்படுத்துதல்
இந்த நிலையில் திருச்சி நகரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து திருச்சி நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஒவ்வொரு சிக்னல்களிலும் இளையராஜாவின் இசை ஒலிக்கும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விதிகள்
சிக்னல்களில் உள்ள விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும், வாகன ஓட்டிகள் ரிலாக்சாக பயணிக்க வேண்டும். இதனைத் தாண்டி மிக முக்கியமாக கொரோனா காலகட்டத்தில் விதிமுறைகளை முறையாக பின்பற்றவே வேண்டும் போன்ற விழிப்புணர்விற்காக
இந்த இசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளையராஜா- எஸ்பிபி இணைந்த காம்போவில் உருவான பாடல்களின் இசையாலும் வாகன ஓட்டிகள் நனைகிறார்கள். வளையோசை கல கலவென, தென்றல் வந்து தீண்டும் போதும் உள்ளிட்ட இசைகள் சிக்னல்களில் ஒலிக்கப்பட்டன.

காவல் துறை
திருச்சி மாநகர காவல்துறையின் இந்த முன்னெடுப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இசைக்கு மயங்காதவர்கள் யாரும் உள்ளனரா? அதிலும் இளையராஜாவின் இசைக்கு! திருச்சியில் போக்குவரத்து போலீஸார் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்கள். அதில் சிக்னல்களில் இளையராஜா இசைக்கு பிறகு சிக்னல் கலருக்கு ஏற்ப சிக்னல் கம்பமும் நிறம் மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications