ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் கல்லூரி மாணவிகள்! வீரத் தமிழச்சிகள் பற்றிய ருசிகர தகவல்!
திருச்சி: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையோடு சேர்ந்து பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் களைக்கட்டத் தொடங்கியுள்ளது. தமிழர்களின் வீரத்தை உலகுக்கு பறைசாற்றும் வண்ணம் அடுத்த ஒரு மாத காலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெனிபர், லாவன்யா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் காளைகளை வளர்த்து வருவது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் இரண்டு மாணவிகளும் பி.காம் படித்து வரும் நிலையில், கல்லூரி நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் தாங்கள் வளர்க்கும் காளைகளை கவனித்துக் கொள்கின்றனர்.

வீட்டில் ஒரு உறுப்பினராக நினைத்து காளைகளை வளர்க்கும் இந்த மாணவிகள், அதற்கு தேவையான சத்தான உணவுகளை வழங்கி பராமரித்து வருகின்றனர். தற்போது ஜல்லிக்கட்டு களைக்கட்ட ஆரம்பித்துவிட்டதால் போட்டியில் தங்கள் காளைகளை களமிறக்க முன் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த ஒன்றரை மாதமாகவே கொம்பால் மண்ணை குத்தி குளறுவது, நீச்சல் பயிற்சி என காளைகளுக்கு பயிற்சி அளித்து வரும் இந்த கல்லூரி மாணவிகள், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகளை சீறிப் பாய விடவுள்ளனர்.
கல்லூரி மாணவிகள் ஜெனிபர், லாவன்யா, ஆகிய இருவருக்கும் குடும்பத்தினர் சப்போர்ட்டும் இருக்கிறது. இதனால் தான் அவர்கள் இந்தளவு காளைகளை ஆர்வமுடன் வளர்த்து போட்டியில் களமிறக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டு வளர்ப்பு என்றாலே ஆண்கள் மட்டும் என்ற காலம் மலையேறி இன்று பெண்களும் காளைகளை வளர்த்து வருவது ஆரோக்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் மட்டுமே ஜல்லிகட்டு காளைகளை குடும்பத்தில் ஒரு ஆளாக வளர்ப்பார்கள் என்ற நிலையில் இப்போது தமிழ்நாடு எங்கும் பரவலாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications