ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் 12ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று. தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே இன்று ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் நேரு.
திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியான தொழிலதிபர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அதிகாலை திருச்சியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம் முட்புதரில், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமஜெயம் கொலைக்குப் பின்னணி என்ன என போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அந்த காலகட்டத்தில் பல்வேறு கதைகள் உலவின. அரசியல் தொடர்பான கொலை என்றும், வேறு பிரச்சனை என்றும் சில பேச்சுகள் ஓடின. ஆனாலும், போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளி என யாரையும் கண்டறிய முடியவில்லை. கொலை நடந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர போலீசார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சுமார் 1000 பேரை விசாரித்தும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வழக்கை சிபிஐக்கு மாற்றி கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பரில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
ஆனாலும், குற்றவாளியை நெருங்க முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 13 ரவுடிகளை பிடித்து உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. கேள்விகள் கேட்டு, அதற்கு பதில் சொல்லும்போது இதயத்துடிப்பை கவனித்து அவர்கள் உண்மையைச் சொல்கிறார்களா பொய் சொல்கிறார்களா என்று நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதேபோல இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகள் அமைந்தன. கொலையாளிகள் காரில் தப்பிச் சென்றிருந்தால் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகளில் அது பதிவாகியிருக்கலாம். அதைக் கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியும் என்ற அடிப்படையிலும் ஒருபுறம் விசாரணை நடைபெற்றது. ஆனாலும், இதுவரை ராமஜெயம் வழக்கின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படவில்லை.
எத்தனையோ கொலைச் சம்பவங்களில் குற்றவாளிகளை துப்பு துலக்கி கண்டுபிடித்துள்ள தமிழ்நாடு காவல்துறையால் அதிகாரம் மிக்க பதவியில் இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், முக்கிய புள்ளியுமான ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளி யார் என்பதை 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்க முடியாதது யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
இந்நிலையில், கே.என். ராமஜெயத்தின் 12ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் நேரு. பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் துரை வைகோ ஆகியோரும், ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications