உங்கள் உதவியும் தேவைப்படும்.. கொத்தமங்கலம் வீரமணி குழுவிற்கு மீண்டும் அழைப்பு.. இதுதான் காரணம்!
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் சிக்கி இருக்கும் நிலையில் மீட்பு படை மூலம் கொத்தமங்கலம் வீரமணி குழுவிற்கு அவசரமாக மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் சிக்கி இருக்கும் நிலையில் மீட்பு படை மூலம் கொத்தமங்கலம் வீரமணி குழுவிற்கு அவசரமாக மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுஜித் விழுந்த சம்பவம் நாட்டையே பதை பதைக்க வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தார்.
கடந்த 70 மணி நேரமாக சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை படை, ஓஎன்ஜிசி அனைத்தும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது .

என்ன முயற்சி
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருந்த போது, முதலில் சில தனியார் கருவிகள் வைத்து அவரை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதேபோல் கயிறு கட்டி சுஜித்தை தூக்கும் முயற்சிகளும் நடந்தது. அருகே இன்னொரு பக்கம் சுரங்கமும் தோண்டப்பட்டது.

கீழே ஆழமாக
ஆனால் சுஜித் இதனால் மேலும் கீழே ஆழமாக விழுந்தார். முதலில் 25 அடியில் இருந்த சுஜித் தற்போது 88 அடியில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி சுஜித்தை மீட்க புதுக்கோட்டையை சேர்ந்த கொத்தமங்கலம் வீரமணி குழு வந்தது. ஆனால் இவர்கள் அப்போது மீட்பு பணியை செய்ய முடியவில்லை.

மண் விழுந்தது
சுஜித் மீது மண் விழுந்து இருந்ததாலும், ஓஎன்ஜிசி பள்ளம் தோண்டும் பணியை செய்து வந்ததாலும் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கொத்தமங்கலம் வீரமணி குழுவினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் முயற்சி
இன்னும் சில மணி நேரத்தில் கொத்தமங்கலம் வீரமணி குழுவினர், அந்த பகுதிக்கு வந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரிக் மிஷின் மூலம் குழி தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் சுஜித்தை மீட்க முடியவில்லை என்றால், கொத்தமங்கலம் வீரமணி குழுவை வைத்து மீண்டும் முயன்று பார்க்கலாம் என்று முடிவு செய்ய்துள்ளனர்.

எப்படி மீட்பார்கள்
இவர்கள் ரோபோ போன்ற கருவியை வைத்து குழந்தையை மீட்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவசரத்திற்கு இவர்களின் உதவியும் தேவைப்படும் என்பதால், அந்த குழுவை மீட்பு குழு தற்போது வரவழைத்து இருக்கிறது. இன்று இரவிற்குள் எப்படியாவது சுஜித் மீட்கப்பட்டுவிடுவார் என்று மீட்பு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications