நமக்கு எதிரி திமுக மட்டும் இல்ல.. ‘இவங்க தான்’ - ஓபிஎஸ் டீமை விடாமல் அட்டாக் செய்த விந்தியா!
திருச்சி : திமுக எப்படி நமக்கு எதிரியோ அப்படித்தான் ஓ.பன்னீர்செல்வமும் நமக்கு எதிரி எனப் பேசியுள்ளார் நடிகை விந்தியா. திருச்சியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா, திமுக அரசையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழகத்தின் முதல்வராக கொண்டுவர பாடுபட வேண்டும் என விந்தியா கேட்டுக்கொண்டார்.
சமீபத்தில் நடிகை விந்தியா "தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவ நான்.. இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன்.. கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவரா இல்லை, மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுக்கூட்டம்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஸ்ரீரங்கத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி தலைமை தாங்கினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர், நடிகை விந்தியா கலந்துகொண்டு பேசினார்.

திமுக மக்கள் விரோத ஆட்சி
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய விந்தியா, "திமுக அரசு மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு சுமைகளை மக்கள் மீது திணித்துள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மாறாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. பொதுமக்களை திமுக காக்க மறந்துவிட்டது.

ஓபிஎஸ் எதிரி
அதிமுகவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டிக் காத்து வந்தனர். தற்போது அந்த இடத்தில் எடப்பாடியார் இருந்து நம்மை காத்து வருகிறார். திமுக நமக்கு எப்படி எதிரியோ, அதுபோல அதிமுக அலுவலகத்தை தாக்கியவர்களையும் எதிரியாகத்தான் நினைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை மீண்டும் தமிழகத்தின் முதல்வராக கொண்டுவர பாடுபட வேண்டும்." எனப் பேசினார்.

பாடம் புகட்டுவார்கள்
மேலும், ஆ.ராசா இந்துக்கள் பற்றி பேசியது தொடர்பாக விமர்சித்த விந்தியா, இந்துக்களை பற்றி ஆ.ராசா இழிவாகப் பேசியது புதிதல்ல. இந்துக்களை தரக்குறைவாக பேசுவதை தி.மு.க வாடிக்கையாக வைத்துள்ளது. வரச் சொல்லுங்கள் ஒரே மேடையில் பேசுவோம். இவர்களுக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
