‛இன்று பிரசாரத்திற்கு கிளம்புறேன்’.. மோதலுக்கு நடுவே ஸ்டாலின் கூறியதும் ‛பெஸ்ட் ஆப் லக்’ சொன்ன ஆளுநர்
திருச்சி: வரும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி உள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவியிடம் தேர்தல் பிரசாரத்தை இன்று முதல் தொடங்க உள்ளதாக கூறியதும், அதற்கு ஆளுநர் ஆர்என் ரவி சொன்ன பதில் பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது. இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள 18 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். திருச்சி சிறுகனூரில் இன்று திமுகவின் முதல் பிரசார பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது.
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின், இன்றைய தினம் ஆளுநர் ஆர்என் ரவியிடம் நேரடியாக தனது தேர்தல் பிரசாரம் பற்றி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்று மாலை 3 மணியளவில் சென்னை ராஜ்பவனில் பொன்முடி அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்தார்.
இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்என் ரவியிடம், ‛‛இன்று முதல் நான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்’’ எனக்கூறியுள்ளார். இதை கேட்டதும் ஆளுநர் ஆர்என் ரவி ‛ஆல் தி பெஸ்ட்’ என தெரிவித்துள்ளார். இந்த தகவலை முதல்வர் ஸ்டாலின் திருச்சி சிறுகனூரில் இன்று நடந்த திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஆளுநரை வைத்து திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு புறப்படும் முன்பு அமைச்சர் பொன்முடி பதவிப்பிரமாணம் செய்து வைத்துவிட்டு தான் வந்தேன். ஆளுநர் அவராக பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை. பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று கூறிவிட்டார். நாங்கள் விடுவோமா. திமுக காரங்க அல்லவா நாம். உச்சநீதிமன்றம் சென்றோம். வாதம் நடந்தது. எப்படிப்பட்ட கண்டனத்தை ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
அதற்கு பிறகு அழைப்பு வந்தது. ராஜ்பவனில் பொன்முடி அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மரியாதைக்கு பூங்கொத்து ஒன்றை ஆளுநருக்கு கொடுத்துவிட்டு புறப்படுவதாக கூறினேன். இன்று பிரசாரம் தொடங்குவதாக கூறினே். அதற்கு அவர் பெஸ்ட் ஆப் லக் என்று கூறினார். ராஜ்பவனில் தொடங்கிய இந்த பயணம் குடியரசு மாளிகை வரை செல்ல உள்ளது’’ என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications