Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனது பதவியை பறித்தவர்களுக்கு நன்றி.. மீண்டும் சீட் இல்லாததால் திருநாவுக்கரசர் எம்பி கடும் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

திருச்சி: வரும் லோக்சபா தேர்தலில் திருச்சியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போக செய்தவர்களுக்கு நன்றி என அவர் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

Lok Sabha Election 2024 Trichy Congress MP Thirunavukkarasar says thanks to those who took away his MP Seat

ஆனால் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி வைகோவின் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார்.

திருச்சி தொகுதியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட மயிலாடுதுறை தொகுதியில் வாய்ப்பு கோரி திருநாவுக்கரசர் எம்பி காய்நகர்த்தினார். ஆனால் மயிலாடுதுறை தொகுதியில் திருநாவுக்கரசர் எம்பிக்கு காங்கிரஸ் மேலிடம் சீட் வழங்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

அறிக்கை: இந்நிலையில் தான் திருநாவுக்கரசர் எம்பி 4 பக்கத்தில் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி காங்கிரஸ் எம்பியாக செய்த 5 ஆண்டு சாதனைகளை பட்டியலிட்டுள்ளதோடு, தனது எம்பி பதவியை பறித்தவர்களுக்கு நன்றி என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வணக்கத்திற்குரிய வாக்காளப் பெருமக்களே. 17-வது பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு வரலாறு காணாத வாக்குகளை அள்ளித் தந்தீர்கள்.

வாக்கு வித்தியாசம்: மொத்தத்தில் பதிவான 10,48,779 வாக்குகளில் கூட்டணி வேட்பாளரான எனக்கு மட்டும் 6,29,285 வாக்குகள் அதாவது இத்தொகுதியில் அனைத்து கட்சிகளுக்கும் பதிவான மொத்த 100 சதவிகித வாக்குகளில் சுமார் 60 சதவிகித வாக்குகளை தாராளமாய் தந்து சுமார் 4,60,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற உறுப்பினராக, இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன்.

நேர்மையான பணி: கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புகுண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மற்றும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது. 288 பணிகள் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி அனைத்து பணிகளிலும் எந்த லஞ்ச, ஊழல் புகார்களுக்கும், ஆட்படாமல், நேர்மையாகவும், நாணயமாகவும் மக்கள் பணியாற்றியுள்ளேன்.

10 ஆயிரம் மனுக்கள்: திருச்சியில் செயல்பட்ட எனது நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்தும், சென்னை, டெல்லி அலுவலகத்தில் இருந்தும் எனது சுற்றுப் பயணத்திலும், மக்கள் அலுவலகம் வந்தும், அனுப்பிய வகையிலும், பெறப்பட்ட சுமார் பத்தாயிரம் மனுக்களை மத்திய - மாநில அமைச்சர்களுக்கும், உரிய அரசு துறைகளுக்கும் அனுப்பி, பல்வேறு விதமான நலப் பணிகளை செய்துள்ளேன். அதேபோல் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளேன்.

தொங்கு பாலம்: கொரோனா கால தடங்கல் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்றதோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிகழ்ச்சிகள் உட்பட அரசு மற்றும் பல பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். தேர்தல் வாக்குறுதியான, சுமார் 10 ஆண்டு காலமாக முடிவு பெறாமல் "தொங்கு பாலம்" என்று சொல்லப்பட்டு வந்த ஜங்ஷன் மேம்பாலத்திற்கு ராணுவ இடம் பெறப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை பெற்று தந்துள்ளேன். திருச்சி பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, திறக்கப்பட்டது.

துப்பாக்கி தொழிற்சாலை: பி.எச்.இ.எல் (BHEL) , துப்பாக்கி தொழிற்சாலை, ராணுவத்திற்கான டேங்க் தொழிற்சாலை, ரயில்வே தொழிற்சாலை, மத்திய வாழை ஆராய்ச்சி நிறுவனம், மத்திய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாராளுமன்றத்திலும், கமிட்டிகளிலும், அமைச்சர்களிடமும் பேசி இவை திறம்பட இயங்க உதவியுள்ளேன். விமான நிலைய கமிட்டிக் கூட்டம், மாவட்ட வளர்ச்சிக் குழு ((DISHA) கூட்டம், ஆகியனவற்றின் தலைமை ஏற்று நடத்தி திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களின் மக்கள் நலப் பணிகள் சீராக நடைபெற ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியுள்ளேன்.

மெட்ரோ திட்டம்: தொல்லியல் துறையை தமிழக மாநிலத்தில் இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாகக் கொண்டு 20 மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன். ஸ்மார்ட் சிட்டி, தொழில்நுட்ப பூங்கா, புதிய இணைப்பு ரயில்கள், புதிய விமான சேவைகள், புதிய பேருந்து நிலையம், குடிநீர் வடிகால் பணிகள் இப்படி பல பணிகள் நடைபெற குரல் கொடுத்தும், துணை நின்றும் செயல்பட்டுள்ளேன். திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

லாவன்யங்கள் இல்லை: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற மத்திய - மாநில அரசுகளின் ஆயிரக்கணக்கான கோடிகளில் மேற்கொள்ளப்பட்ட பல வளர்ச்சிப் பணிகளில் எந்த லஞ்ச லாவன்யங்களிலும் நான் ஈடுபடாமல் பணிகள் நிறைவேற்றப்பட துணை நின்று ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன். 87 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 53.4 லட்சம் மதிப்பிலான 87 நான்கு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி, இந்தியாவிலேயே எங்கும் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யாததை செய்துள்ளேன்.

மாணவர்களுக்கு உதவி: மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்றவற்றை வழங்கியுள்ளேன். இப்படி மனச்சாட்ச்சிக்கு விரோதம் இல்லாமல் வாக்களித்த மக்களுக்கு முழுமையாக பாடுபட்டுள்ளேன். பாராளுமன்றத்தில் 70 சதவிகித வருகைப் பதிவோடு, 37 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். ஜீரோ அவர், விதி எண் 377 மற்றும் 358 வினாக்கள் 4 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன்.

மீண்டும் வாய்ப்பில்லை: ஜாதி மத எல்லைகளை கடந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் என அனைவரும் இத்தொகுதியில் நான் சுற்றுப் பயணம் செய்கிற போது என் மீது காட்டிய அளப்பரிய பாசமும், அன்பும் என் உள்ளம் முழுவதும் நிறைந்து என்றென்றும் பசுமையாய் எப்போதும் நிலைத்து நினைவில் இருக்கும். இத்தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இத் தொகுதி மக்களுக்காக எனது பணி எப்போதும் தொடரும்.

2வது தலைநகராக்க முயற்சி: திருச்சியை இரண்டாவது தலைநகராக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியை மையமாகக் கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். மக்கள் என்னை எப்போதும் சந்திப்பது போலவும், தொலைபேசி வாயிலாகவும், திருச்சி அலுவலகத்திலும் எப்போதும் போல் என்னை சந்திக்கலாம். தொடர்பு கொள்ளலாம். கடந்த சுமார் 47 ஆண்டுகளாக எனக்குள்ள மத்திய - மாநில அரசுகளின் தொடர்பு, அனுபவம் ஆகியனவற்றின் அடிப்படையில் முடிந்த நன்மைகளை திருச்சி தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து செய்து பணியாற்றுவேன்.

மக்கள் பணி தொடரும்: 1977-ல் ம்.ஜி.ஆா் அவர்களால் சட்டமன்ற உறுப்பினரான அந்த காலம் தொட்டு மத்திய மாநில பொறுப்புகளில் இருந்தும், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், எந்த அரசு பொறுப்புகள் வகிக்காத காலங்களிலும் பொது மக்களின் நலனுக்கான பணிகளை ஆற்றுவதில் இருந்தும் மக்கள் தொடர்பில் இருந்தும் எப்போதும் நான் ஓய்வு பெற்றதே இல்லை. என் வாழ்நாளில், என் இல்லத்தில் நான் இருந்த நாட்களை காட்டிலும் மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பல முறை சுற்றி வந்து மக்களை சந்தித்துள்ளேன். எனது மக்கள் பணி தொடரும்.

நன்றி: நான் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டபோது உதவிய, துணை நின்ற மாநில - மத்திய அரசு அலுவலர் பெருமக்கள், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட, தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு பொது நல சங்கங்கள், அமைப்புகள், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், பொதுமக்கள் என ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பெருமக்களுக்கும் எனது கோடான கோடி நன்றி. இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

"தர்மத்தின் வாழ்வுதனை
சூது கவ்வும், தர்மம்
மறுபடியும் வெல்லும்."
மீண்டும் தொகுதி மக்களுக்கு, நன்றியும், வாழ்த்தும், வணக்கமும்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+