அமைச்சர் துரைக்கண்ணு மரணத்தில் மர்மம் இல்லை... ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை -அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி: அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் எந்த மர்மமும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
துரைக்கண்ணு மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். காவேரி மருத்துவமனையில் நல்ல முறையில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வந்ததாக விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் வகையில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்காமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் தனது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் என்றும் அநாகரீக முறையில் அவரது குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் அவர் இதனைக் கூறினார்.
இதனிடையே நேற்று முன் தினம் ஸ்டாலின் விடுத்திருந்த அறிக்கையில், மரணக்குழியிலும் ஊழல் நாற்றமா? என்ற தலைப்பில் சில விவகாரங்களை சுட்டிக்காட்டி இருந்தார். அதில், அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதை தன்னால் புறக்கணிக்க முடியவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்வினையாற்றிருக்கிறார். ஆனால் அவருடன் இருந்த அமைச்சர் தங்கமணி இது குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications