முத்தரையர் சதய விழாவில் நடுரோட்டில் சாகசம்.. பைக் சாவியை எடுக்க சென்ற போலீசாரிடம் ஆவேசம்! பரபரப்பு
திருச்சி: முத்தரையர் சதய விழாவில் சாலையை மறித்து சாகசம் செய்த இளைஞர்களின் பைக் சாவியை எடுக்க முயன்ற காவலரிடம் அந்த இளைஞர்கள் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் சற்று பதற்றமான சூழல் உருவானது.
கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சையை ஆட்சி செய்த அரசர் தான் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்.. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்று அறியப்படும் இவர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளை ஆண்ட தலைசிறந்த மன்னராவர்.

துணிச்சலான தமிழ் மன்னர்களில் ஒருவரான இவர் பல இடங்களைப் போரிட்டு வென்றுள்ளார்.. இவருக்கு 1996இல் தமிழக அரசின் சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திருச்சியில் சிலை ஒன்றை நிறுவினார்..
பிறந்த நாள்: அதைத் தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு முதல் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 1,349ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து முத்தரையர் சங்கத்தினர் மற்றும் அதிமுக, திமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும் பெரும்பிடுது முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பைக் சாகசம்: இந்த விழாவுக்காகத் திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது. மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டூ வீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது நடந்த சில சம்பவங்கள் தான் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பரபரப்பு: அதாவது இளைஞர்கள் பலரும் பைக்கில் ஊர்வலமாக வந்துள்ளனர். அப்போது பட்டாசுகளை வெடித்தும், கொடிகளை அசைத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது ஒரு சிலர் சாலையை மறித்து பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த காவலர்கள் அந்த பைக் சாவியை எடுக்க முற்பட்டுள்ளார். அப்போது பைக் சாவியை எடுக்க விடாமல் இளைஞர்கள் சிலர் ஆக்ரோஷமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து கிளம்பச் சொல்லி வலியுறுத்தினார். எந்தவொரு பிரச்சினையும் சதய விழா நடக்க போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications