அது எனக்கு தெரியாது.. கை விரித்த நயினார் நாகேந்திரன்.. சிக்கலில் தேஜ கூட்டணி
திருச்சி: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதுரை வந்திருந்தார். இந்த மாதத்திற்குள் அவர் மேலும் 2 முறை தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்கவுள்ளார். இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி வருகிற மார்ச் 11 ஆம் தேதி திருச்சி வருகிறார். திருச்சியில் தேஜகூட்டணி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். அதில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 2 இடங்களை பார்த்துள்ளோம். பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்டவை ஆலோசித்து முடிவு செய்வோம்.

அவர்களுக்கு தான் தெரியும் [Nainar Nagendran]
நேற்று கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் குறித்து கலந்துரையாடினோம். அவ்வளவுதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவோம். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அவர் ஏன் டெல்லி சென்றார் என்பது குறித்து அவருக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தான் தெரியும்.
பெண்களுக்கு பாதுகாப்பு
பாஜகவிக்கு ராஜ்யசபா சீட் வழங்குவது பற்றியும் பேசுவார்கள். அனைத்து துறைகளிலும் தற்போது தமிழ்நாடு தாழ்ந்து போயுள்ளது. புத்தகங்களை பிடிக்க வேண்டிய மாணவர்கள் கஞ்சாவை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாராலும் நடமாடி முடிவதில்லை. தமிழ்நாட்டில் 50 சதவீதம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
மக்கள் பலம்
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுகின்றன. துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காக தான் திமுக இந்த தேர்தலை சந்திக்கிறார்கள். பண பலம், அதிகார பலம் என்று எல்லா துறைகளிலும் திமுக வாரி குவித்துள்ளது. அதைவிட மக்கள் பலம் தான் சிறந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications