நாடாளுமன்ற தேர்தலில்.. 'இந்த' சின்னத்தில்தான் போட்டியிடுவேன்! அதிரடியாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்!
திருச்சி: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிதான் பதவியேற்பார். இதன் மூலம் நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக பிரதமராக பதவியேற்றவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் 100வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. எனவே இதனை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல காங்கிரஸ் கடந்த 9 ஆண்டுகளில் ஏராளமான நெருக்கடிகளை சந்தித்து வந்திருக்கிறது. இது தொடராமல் இருக்க இந்த தேர்தலில் ஜெயிக்க வேண்டியது முக்கியம்.

இந்த இரு கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி என தோழமை கட்சிகளை இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் காங்கிரஸின் இந்தியா கூட்டணியில், திமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதேபோல பாஜகவின் தேஜ கூட்டணியில் அதிமுக இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் கூட்டணியை முறித்துக்கொண்டது. இன்னும் லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை.
அதேபோல முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வமும் எந்த கட்சிகளுடன் கூட்டணியில் நிற்பார்? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாகவும், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், அதில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்தன. அதுமட்டுமல்லாது அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே ஓபிஎஸ் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் மொத்தம் 35 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கி இருக்கிறார். எதிர்வரும் தேர்தலில் இவர் ஓபிஎஸுடன் கைகோர்க்க இருப்பதால் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதேபோல சமீபத்தில் தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 'அதிமுக தொண்டர் உரிமை மீட்புஜ் குழு' நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "நாட்டை 10 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும். இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவேன். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்களும், எடப்பாடி தரப்பில் உள்ளவர்களும் என்னிடம் பேசி வருகின்றனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications