அதிமுக கூட்டணிக்கு வர ரூ.100 கோடி கேட்குறாங்க.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்.. எந்த கட்சி?
திருச்சி: ‛‛கூட்டணிக்கு வருபவர்கள் சும்மா வருவது இல்லை. 20 சீட் கேட்பதோடு, ரூ.50 கோடிஅல்லது ரூ.100 கோடி பணம் கேட்கின்றனர்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தல்களிலும் அதிமுகவை விட திமுக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி கடந்த 2021ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்தது.

அதன்பிறகு நகர்புற உள்ளாட்சி தேர்தல், 2024 லோக்சபா தேர்தலிலும் அதிமுக தோல்வியடைந்தது. இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனை அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியும் உணர்ந்துள்ளார்.
இதனால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் ஆளும் திமுகவை வீழ்த்த தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருப்பதாகவும், வேறு கூட்டணிக்கு செல்லும் தேவை இல்லை என்றும் அறிவித்து விட்டார்.
அதேபோல் அதிமுகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. அதிமுக கூட்டணியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 80 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முற்றிலுமாக மறுத்து அறிக்கை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிமுகவுடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அவரது அறிக்கை உறுதி செய்தது.
இருப்பினும் தேர்தல் நெருங்கும் வேளையில் நிச்சயம் முக்கிய கட்சிகள் தங்களின் கூட்டணியை ஏற்கும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இது ஒருபுறம் இருக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. அதன்படி மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த குழு மாவட்ட வாரியாக பயணித்து நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு வருகிறது.
அதன்படி திருச்சி மாவட்ட அதிமுக கள ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசியிருப்பது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இந்த கூட்டத்தில் கூட்டணிக்கு வரும் கட்சிகள் பற்றிய அவர் பேசியதாவது:
"கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் ரண வேதனை இருக்கிறது. எவன் வந்தாலும் சும்மாவா வரான். ஒரு 20 சீட் கொடுங்க. ஒரு 50 கோடி கையில் கொடுங்க. ரூ.100 கோடி கொடுங்கனு கேட்குறாங்க.. ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேரம் பேசுகிறார்கள். நாம் எங்கே போவது? இப்போது அதிமுக மார்க்கெட் போய் கொண்டிருக்கிறது. எடப்பாடியாரை தான் மக்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.
அப்போது ஏன் தலைவரே.. ரூபாயை குறைச்சிக்க கூடாதா? என்று சொன்னால்.. இதை வைத்து தான் பிஸ்னஸ் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த கொடுமையில் எடப்பாட மாட்டி கொண்டு இருக்கிறார். கூட்டணிக்கு பேசி கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான்.. ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடி தர வேண்டும்" என்றார்.
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அதிமுக கூட்டணியில் இணைய எந்த கட்சி ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி கேட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications