முதல்வர் கான்வாய் கிளம்பியாச்சு! திருச்சி போலீஸாரின் திக்.. திக.. நிமிடங்கள் கடைசியில் என்ன நடந்தது?
திருச்சி: இரண்டு நாள் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்றிரவு சென்னை புறப்பட்டுவிட்டார்.
இந்நிலையில் நேற்று நண்பகல் அவர் திருச்சி வந்தடைந்ததும் திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரை அவரது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிக்க முடிவெடுத்தது தான் திருச்சி போலீஸாரை தண்ணீர் குடிக்க வைத்துள்ளது.
காரணம் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி பல ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வரும் அந்த மூத்த நிர்வாகியின் இல்லம் எங்கிருக்கிறது எனத் தெரியாமல் விலாசத்தை தேடி அலசி ஆரய்ந்தது தான்.

திருச்சியில் ஸ்டாலின்
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவின் மூத்த நிர்வாகியான திருச்சி செல்வேந்திரன் இல்லத்துக்கு சென்று அவரை நலம் விசாரிக்க முடிவெடித்திருக்கிறார். இது குறித்த தகவலை சிறப்பு பாதுகாப்பு பணிக்காக முதல்வருடன் வந்திருந்த செந்தாமரைக்கண்ணன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூறி வழியை கிளியர் செய்து வைக்குமாறு கூறியிருக்கிறார்.

இடம் மாறி
திருச்சி எஸ்.பி.யும் தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளுக்கு விஷயத்தை கொண்டு சென்று திருச்சி செல்வேந்திரன் இல்லம் முன்பு முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்கு போலீஸை நிறுத்துமாறு அறிவுறுத்தினார். ஆனால் திருச்சி செல்வேந்திரன் இல்லம் எந்த தெருவில் இருக்கிறது என்பதை கண்டறிவதற்குள் காவல்துறையினருக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம். திருச்சி உறையூர் சீனிவாசா நகரில் வசித்து வநத அவர் அண்மையில் புதிய தெருவுக்கு குடி பெயர்ந்திருக்கிறார்.

பைலட் அதிகாரி
இந்த தகவல் கட்சியினருக்கும் தெரியவில்லை. செல்வேந்திரனை அறிந்தவர்களை கேட்டால் சீனிவாசா நகரில் தான் இருக்கிறார் என்று பதில் வந்திருக்கிறது. ஆனால் சீனிவாசா நகரில் அப்படியொருவர் இல்லை. இந்த விவகாரத்தை முதல்வரிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவரது கான்வாய் பைலட் அதிகாரி தவித்திருக்கிறார். பிறகு விமான நிலையத்தில் இருந்து ஐயப்பன் கோவில் ரவுண்டானா ஜங்ஷன் அருகில் கான்வாய் வருவதற்குள் ஒரு வழியாக திருச்சி செல்வேந்திரனின் சரியான விலாசம் கிடைத்திருக்கிறது.

கடைசியில் நிம்மதி
இதையடுத்து ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சு விட்ட பைலட் அதிகாரியான முருகேசன் இன்ஸ்பெக்டர், முதல்வரின் கான்வாயை மிகச்சரியாக திருச்சி செல்வேந்திரன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். இந்த நிகழ்வு முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு சிறிது நேரம் பதற்றத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications