பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு... திருச்சியில் விவசாயிகள் ஆத்திரம்!
Recommended Video

திருச்சி: திருச்சியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்த விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் டெல்டா பகுதி விவசாயத்திற்கும் மட்டுமல்லாமல், 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு இருந்து வருகிறது.

தற்போது, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது பகுதியில் புதிய அணையை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம், தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தமிழக விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தநிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மா.பா. சின்னதுரை தலைமையில், கருப்புக் கொடியுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி பாலம் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, தமிழகத்திற்கு துரோகம் இழைத்த மோடி எனக் கூறி அவரின் உருவபொம்மையை எரித்தனர்.
மேலும், மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனையடுத்து, பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ள, மத்திய அரசுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications