செந்தில் பாலாஜி கேஸ்ல கூட இப்படித்தான்.. சவுக்கு சங்கர் வழக்கில் போலீஸ் தரப்பு வைத்த பரபர வாதம்!
திருச்சி: சவுக்கு சங்கரை போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பக் கோரிய அரசு தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜி வழக்கை மேற்கோள் காட்டினார்.
காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் திருச்சி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகார் தொடர்பாக நேற்றைய தினம் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர்: அப்போது, கோவையில் இருந்து தன்னை திருச்சி அழைத்து வரும் வழியில் பெண் காவலர்கள் தனது வலது கையை முறுக்கி கடுமையாக தாக்கினர் என திருச்சி 3வது முதன்மை குற்றவியல் நடுவர் ஜெயபிரதாவிடம் சவுக்கு சங்கர் புகார் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே, தனது கை உடைக்கப்பட்டு அதற்கு மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், மருந்து, மாத்திரைகளை கூட வழங்காமல், தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாகவும், தன்னை தாக்கும்போது அதனை புகைப்படம், வீடியோ எடுத்து போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து கொண்டதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
மேலும், தனக்கு உடனடியாக சிகிச்சை வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலில் எந்தவிதமான உள்காயங்களும் இல்லை, வேறு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று மீண்டும்: இதையடுத்து, மீண்டும் இந்த வழக்கை நீதிபதி விசாரித்தபோது, சவுக்கு சங்கரை போலீஸ் வாகனம் மூலம் அழைத்து வந்த பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது பெண் காவலர்கள் தாங்கள் சவுக்கு சங்கரை தாக்கவில்லை என்றும் அவர்தான் திருமணமாகாத தன்னிடம் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை கேட்டார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி மாவட்டம் லால்குடி கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி இன்றைக்கு (மே 16) தீர்ப்பு வழங்குவதாக நேற்று தெரிவித்தார். அதன்படி இன்று சவுக்கு சங்கர், லால்குடி சிறையில் இருந்து பெண் காவலர்கள் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
ஒட்டுமொத்த பெண்களும்: நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஹேமந்த், "சவுக்கு சங்கர் யூடியூப் சேனலில் பெண் காவலர்களையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய பெண்களுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் பெண்களை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துகளை தெரிவித்தது சட்டப்படி குற்றம்" என வாதிட்டார்.
செந்தில் பாலாஜி வழக்கை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்: மேலும், "சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது என்று எதிர் தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அவருக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. என்றாலும் கூட அந்த வழக்கில் சில உண்மைகளை கண்டறிவதற்காக அவர் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். அது போலவே இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக யார் செயல்படுகிறார்கள், இவர் இதுபோன்று தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள், எதற்காக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்தலில் சில முக்கிய ஆவணங்களும், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள சவுக்கு சங்கருக்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும்" எனக் கோரினார்.
1 லட்சம் பேர்: சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "யூடியூப் சேனலில் பேசியதற்காக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்பு கோவை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கியுள்ளது. அதேசமயம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலங்களில் சோதனை செய்து சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கில் எதற்காக போலீஸ் கஸ்டரி வழங்க வேண்டும்? தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் பேர் சவுக்கு சங்கர் மீது புகார் தெரிவித்து இருந்தால், ஒரு லட்சம் முறை நீதிமன்றத்தில் ஆஜராக முடியுமா? எனவே தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள புகார்களை ஒரே வழக்காக எடுத்துக்கொண்டு தவறுகள் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டு விட்டது.
உயிருக்கு ஆபத்து: எனவே சங்கருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது. ஏற்கனவே சங்கரின் உடல்நிலை சரியில்லை. அவரது கை உடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று வாகனத்தில் வரும்போதே அவர் பெண் காவலர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதையும் தாண்டி போலீஸ் கஸ்டடிக்கு அனுமதித்தால் சங்கரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே போலீஸ் கஸ்டடி வழங்கக்கூடாது" எனக் கோரினார்.
1 நாள் கஸ்டடி: சவுக்கு சங்கரை விசாரிக்க போலீசார் 7 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், ஒருநாள் போலீஸ் காவலில் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், மீண்டும் நாளை 4 மணி அளவில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications