குழந்தை வயதில் குழந்தையை சுமக்கும் குழந்தைகள்! திருச்சியில் 9 மாதத்தில் 834 டீன்-ஏஜ் கர்ப்பம்! ஷாக்!
திருச்சி: கடந்த சில ஆண்டுகளில் திருச்சி மாவட்டத்தில் தாய் மரணம், குழந்தை மரணம் போன்ற முக்கிய சுகாதார பிரச்சினைகள் குறைந்து வந்த நிலையில், ஒரு அதிர்ச்சி கலந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது டீனேஜ் கர்ப்பம் (Teenage Pregnancy) என்ற பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2025-2026ல் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை மட்டும் 834 டீனேஜ் கர்ப்ப சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பம், கல்வி அறிவு ஆகியவை பெருகிவிட்ட போதும் குழந்தை திருமணங்கள், குழந்தைகால கர்ப்பங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரச்சனை சமூக பிரச்சனையாக மாறி இருக்கிறது.
குறிப்பாக கேரளா, தமிழ்நாடு போன்ற வளர்ந்த படிப்பறிவுள்ள மாநிலங்களில் சமீபகாலமாக டீனேஜ் கர்ப்பங்கள் அதிகரித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிர்ச்சி தரும் விதமாக திருச்சியில் மட்டும் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 834 டீன்ஏஜ் கர்ப்ப சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி டீனேஜ் கர்ப்பம்
மார்ச்சுடன் 2025-2026 நிதியாண்டு முடிவுக்கு வரும் சூழலில் இந்த எண்ணிக்கை 1,000-ஐ எட்டும் என்று அதிகாரிகள் அதிர வைக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாக 1,000-ஐ தாண்டும் ஆண்டாக இருக்கலாம். சராசரியாக தினமும் 3 முதல் 4 டீனேஜ் கர்ப்ப சம்பவங்கள் திருச்சி மாவட்டத்தில் பதிவாகி வருவதாகவும், ஒரு மாதத்திற்கு சுமார் 100 சம்பவங்கள் நடப்பதாகவும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. 2024-25 நிதியாண்டில் மட்டும் 1,234 சம்பவங்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
குழந்தை கர்ப்பம்
புகாரளிக்கும் முறைகள் மேம்படுத்தப்பட்டதால் தான் எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது என்று ஒரு காரணத்தைக் கூறி சமாளிக்கின்றனர் அரசு அதிகாரிகள். ஆனால் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர். அவர்களது பார்வையில், இந்த எண்ணிக்கைகள் ஆழமான சமூகப் பிரச்சனைகளின் வெளிப்பாடு எனவும், குழந்தை திருமணமே டீனேஜ் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
டீன் ஏஜ் தாய்மை
13 முதல் 19 வயது வரையிலான பெண்கள் கர்ப்பம் அடைவதே டீனேஜ் கர்ப்பம் என கூறப்படுகிறது..... சட்டப்படி 19 வயதில் கர்ப்பம் அடைவது அனுமதிக்கப்பட்டது என்றாலும், மருத்துவ நிபுணர்கள் அதை மருத்துவரீதியக கவலை தரும் விஷயம் என்கிறார்கள். 2025ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான Tamil Nadu Journal of Public Health and Medical Research ஆய்வில், 10-19 வயதிலான தாய்மார்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்குப் பிறகும் அதிக ஆபத்துகளை சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய் குழந்தை சுகாதாரம்
மேலும், ஈக்ளாம்ப்சியா, தொற்றுநோய்கள், பிரசவத்திற்குப் பிந்தைய சிக்கல்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு குறைந்த பிறப்பு எடை, குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறப்பு, கடுமையான நியோநேட்டல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயமும் அதிகம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது. இந்நிலையில், இதற்கு காரணமும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது.
காரணம் என்ன?
காதல் விவகாரம் தெரிய வந்ததும் பெற்றோர்கள் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கிறார்கள். சிலர் வீட்டை விட்டு ஓடிச் சென்று கர்ப்பம் அடைந்த பிறகு குடும்பத்தினர் அவசரமாக திருமணம் செய்து வைக்கிறார்கள். உறவினருக்கே திருமணம் செய்து வைக்கப்படும் சம்பவங்களும் உள்ளன என்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.












Click it and Unblock the Notifications