திருச்சி வரும் பிரபல ஷூ தயாரிப்பு நிறுவனம்.. 13,364 பேருக்கு வேலை ரெடி.. ரூ.1,379 கோடி முதலீடு
திருச்சி: தென்கொரியாவை சேர்ந்த முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான டிகேஜி டேக்வாங் (TKG Taekwang) திருச்சி அருகே உள்ள நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (SEZ) ரூ.1,379 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ. 514.7 கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் 13,364 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த ஷூ தயாரிப்பு நிறுவனமான டிகேஜி டேக்வாங் (TKG Taekwang). இந்த நிறுவனம் சார்பில் திருச்சி அருகே நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய ஆலை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் தான் அந்த நிறுவனத்துக்கு மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தின் (MEPZ or Madras Export Approval Zone) ஒப்புதல் குழு அனுமதி வழங்கி உள்ளது.
மொத்தம் ரூ.1,379 கோடி முதலீடு செய்யும் வகையிலான இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.514.7 கோடி முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக, திருச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுமார் 68.8 ஏக்கர் நிலத்தை எல்காட் (Elcot) மற்றும் MEPZ ஆகியவை அடையாளம் கண்டுள்ளது. இந்த நிலம் நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக ரூ.514.7 கோடி முதலீடு செய்யப்படும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களில் இதன் ஒட்டுமொத்த முதலீடு ரூ. 1,379 கோடியாக உயர உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஷூ-க்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. தோல் அல்லாத ஷூ உற்பத்தி ஆலையாக இது விளங்கும். இந்த தொழிற்சாலை முழுவதுமாக செயல்படும்போது சுமார் 13,364 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுபற்றி சென்னை மெப்ஸ் வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் கூறுகையில்,''ஷூ உற்பத்தியை 3 ஆண்டுகளுக்குள் தொடங்குமாறு நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். இதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி போன்ற இரண்டாம் கட்ட நகருக்கு இது மிகப்பெரிய முதலீடாகும்" என்றார்.
இதுபற்றி திருச்சி உள்நகர மேம்பாட்டு முயற்சிகள் அமைப்பின் (TIDES) உறுப்பினர் என் மணிவண்ணன் கூறுகையில், ''பெரம்பலூர் சிப்காட் தொழில் பூங்கா ஏற்கனவே தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. தற்போது திருச்சியில் மேற்கொள்ளப்படும் இந்த முதலீடு இந்த பகுதியில் இருந்து செல்லும் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications