திருச்சி மலேசியா விமானத்தின் சக்கரத்தில் மோதிய பறவை.. 183 பயணிகள் தப்பினர்.. தாமதத்தால் அவதி
திருச்சி : திருச்சியில் இருந்து புறப்பட்ட மலேசியா விமான சக்கரத்தில் பறவை மோதிய போதும் 183 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். 16 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற விமானத்தால் பயணிகள் அவதி அடைந்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் பெங்களூரு, புதுடெல்லி, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் சென்று வருகிறது. இவ்வாறு திருச்சியில் இருந்து தினசரி சுமார் 50 விமானங்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.10 மணி அளவில் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்டு ஓடுதள பாதையில் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் விமானிகள் உள்பட 183 பேர் இருந்தனர்.இதனிடையே விமானத்தின் முன்சக்கரத்தில் திடீரென்று பறவை மோதி சிக்கி கொண்டது. இதனை கண்ட விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். அதன் பின் விமானம் ஓடுதள பாதையில் இருந்து விமான நிலையவளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
திடீரென்று விமானம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான நிறுவன ஊழியர்கள் நடந்த சம்பவத்தை கூறி பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். ஆனால் விமானம் மீண்டும் எத்தனை மணிக்கு புறப்படும் என்ற தகவலை தெரிவிக்காததாலும், உணவு தாமதமாக வழங்கப்பட்டதாலும் பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர்.இதைத்தொடர்ந்து விமானத்தின் முன் சக்கரத்தில் சிக்கிய பறவையை அப்புறப்படுத்திய பின் புதன்கிழமை மாலை 4.10 மணி அளவில் ஏர் ஏசியா விமானம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரை நோக்கி புறப்பட்டது. சுமார் 16 மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications