மாரியம்மன் கோவில் உள்ளே கிடந்த துப்பாக்கி.. ஒன்று திரண்டு வந்த மக்கள்.. மணப்பாறையில் ஷாக்!
திருச்சி: திருச்சி அருகே கோவிலின் உள்ளே துப்பாக்கி கிடந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கியை போட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது ஆளிப்பட்டி கிராமம். இங்கு பிரபலமான மாரியம்மன் கோவில் உள்ளது.
நேற்று காலை இந்த கோவிலின் வளாகத்தில் நேற்று காலை நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் துப்பாக்கியை கையில் எடுத்து வைத்துள்ளனர்.

துப்பாக்கி
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சிறுவர்களிடம் இருந்து துப்பாக்கி, துப்பாக்கி கவர் மற்றும் இரும்பு குண்டு தோட்டக்களை வாங்கி கோவிலில் வைத்து பூட்டி வைத்தனர். இது பற்றி உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் இன்ஸபெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை
அந்த நாட்டு கை துப்பாக்கியை கைப்பற்றிய போலீசார், துப்பாக்கி கிடந்தது குறித்து அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து திருச்சி துப்பாக்கி பராமரிப்பு பிரிவு காவல்துறையினர் கை துப்பாக்கியின் ரகம் குறித்து ஆய்வு நடத்துவார்கள். அதன்பிறகு இது எந்த வகையான துப்பாக்கி என்பது உறுதியாக தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போட்டுச் சென்றது யார்?
கோவிலில் உறையுடன் கை துப்பாக்கி மற்றும் குண்டுகளை விட்டு சென்றது யார்? இந்த துப்பாக்கி வேட்டைக்காக பயன்படுத்தபட்டதா? அல்லது வேறு ஏதும் விபரீத செயலுக்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து மணப்பாறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக
கோவில் முன்பு துப்பாக்கி கிடக்கும் சம்பவமறிந்து சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் கோரிக்கை
''மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், அதுவும் கோவிலின் உள்ளே மர்ம நபர்கள் துணிச்சலுடன் துப்பாக்கியை போட்டு சென்றுள்ளனர். சிறுவர்கள் இந்த துப்பாக்கியை எடுத்து பார்த்தபோது வேறு விபரீதம் ஏதும் நிகழ்ந்தால் என்னவாயிருக்கும்? எனவே போலீசார் உடனடியாக துப்பாக்கியை போட்டு சென்ற மர்ம நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications