"தவெக உடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி.. பாஜகவை கழற்றிவிட ரெடியாகிட்டாங்க” - திருமாவளவன்
திருச்சி: தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக திட்டமிட்டு பரப்பும் வதந்தி என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவெகவை ஏற்றுக்கொண்டு பாஜகவை கழற்றிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், விசிக - தவெக கூட்டணி அமையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த திருமாவளவன், "தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. அதிமுக கூட்டங்களில் தான் தவெக கொடிகளைக் காண முடிகிறது. அப்படியென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக உடன்பட்டுள்ளதா?

தவெக தலைவர் விஜய் பல மேடைகளில், பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கிறது என்றால் பாஜகவை கழற்றி விட தயாராகிவிட்டது. பாஜகவை கழற்றிவிடும் பட்சத்தில் அதிமுக கூட்டணி அமைப்பதில் நம்பகத்தன்மையற்ற கட்சியாக மாறிவிடாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
தவெக தரப்பினர் எஸ்.ஐ.டி விசாரணை தேவையில்லை சிபிஐ விசாரணை வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பற்றிய கேள்விக்கு? "அவர்கள் எந்த அடிப்படையில் இந்த கோரிக்கை வைத்தார்கள் என்று தெரியவில்லை. நெரிசலால் ஏற்பட்ட சாவு இல்லை. புறநிலை தூண்டுதலால் நேர்ந்த சாவு என்று கருதுவதாக தெரிகிறது. அதனால் தான் திசைதிருப்ப பார்க்கிறார்களோ என்று விமர்சனம் உள்ளது.
"பல்வேறு நிகழ்வில் நடந்திருக்கிறது மகாமக நிகழ்வில், கும்பமேளா நிகழ்விலும், ஆந்திராவில் அல்லு அர்ஜுன படம் பார்க்க போன பொழுது என இதுபோல சம்பவம் நடைபெற்றுள்ளது. கூடுதலான மக்கள் திரண்டு வருகிற போது எண்ணிக்கை அதிகரிக்கும் நெரிசலில் ஏற்படுகின்ற துயரம் இது. அவர்கள் எந்த கோணத்தில் இந்த கோரிக்கை வைக்கிறார்கள் எதற்காக சிபிஐ கோரிக்கை வைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை" எனத் தெரிவித்தார்.
மேலும் விஜய் கரூர் சென்றால் அவர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது பற்றிய கேள்விக்கு, "இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை பேசுவது அவருக்கு வாடிக்கையாக உள்ளது. கற்பனையாகவும் யூகமாகவும் பல செய்திகளை பரப்புகிறார். அரசியல் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை. சமூக பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் குறியாக இருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தான் தான் தலைவர் என்ற மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.
மேலும் கூட்டம் ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "கொள்கை பிடிப்பு இல்லாமல், வெறும் திரைக்கவர்ச்சியை மட்டுமே வைத்துகொண்டு நேரடியாக முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப்படுவது எந்த விதத்திலும் தகுதி அல்ல. யார் புதிதாக கட்சி தொடங்கினாலும், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொள்கை பிடிப்பு இல்லாமல், அவர்கள் பின்னால் செல்வார்கள் என்ற போக்கை அழிக்கும் விதமாக விசிக மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் மட்டுமே விசிகவில் பயணிக்க முடியும்" எனப் பேசினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தை முன்வைத்து விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என இப்போது பேச்சுகள் எழுந்துள்ளன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, தருமபுரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது தவெக கட்சிக் கொடிகள் காணப்பட்டன.
அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியபோது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, "பாருங்க.. கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாங்க.. ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைத்துச் செல்லும்" எனப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
கரூர் சம்பவ விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு ஆதரவாக பேசி இருந்தார். திமுக அரசை கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார். இதற்கிடையே, விஜய்யை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின. இருதரப்பிலும் அதற்கு மறுப்பு அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications