காதல் திருமணம் செய்த திருச்சி புது மாப்பிள்ளை.. சூது வலையால் பிஎஸ்என்எல் ஊழியரின் வாழ்க்கையே போச்சு
திருச்சி: திருச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. காதல் திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஆன்லைனில் சூதாட்டம் விளையாடும் பழக்கம் இருந்ததாகவும் இதில் பணத்தை இழந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி வடக்கு தாராநல்லூர் அருகே அம்மன் ஸ்டோர் பகுதியை சேர்ந்தவர் பட்டு முத்து. இவரது மகன் கனகராஜ் (வயது 27). கனகராஜ் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டவர் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். அப்போது அவர் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்துள்ளார். தனலட்சுமியும் கனகராஜை காதலித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 9 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

தூக்கில் தொங்கிய கனகராஜ்
திருமணத்துக்கு பிறகு தனலட்சுமி அருகில் உள்ள பகுதியில் பியூட்டி பார்லர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம் போல் நேற்று முன் தினமும் தனலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது கணவர் கனகராஜ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனலட்சுமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கனகராஜை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கணவர் உடலை பார்த்து தனலட்சுமி கதறி அழுதார். பின்னர் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்டமாக அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டம்
அதாவது கனகராஜுக்கு நீண்ட நாட்களாகவே ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், அதில் அதிகளவில் பணத்தை இழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் போலீசார் கனகராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தான் உயிரிழந்தாரா? அல்லது வேறு எதேனும் காரணமா என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை தீர்வு அல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.












Click it and Unblock the Notifications