திருச்சியில் புயலை கிளப்பிய புரோகிதர்.. "அண்ணே, அடுத்த முதல்வரே நீங்கதான்".. பதறிட்டாரு கே.என். நேரு
திருச்சி: 'அடுத்த முதல்வரே நீங்கதாண்ணே' என்று புரோகிதர் சொல்லவும், மூத்த தலைவர் கேஎன் நேரு பதறியதை பார்க்கணுமே.. அதுக்கப்பறம் அந்த விஷயத்தை நேரு சமாளிச்ச விதம் இருக்கே, அதுதான் இப்போது வீடியோவாக இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பஸ் ஸ்டாப்புகள் நிறைய உள்ளன.. ஆனால், பஸ் ஸ்டாண்டு அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்...

திருச்சி பஸ் ஸ்டாண்டு: சமீபத்தில்தான், மக்களின் வசதியை கருத்தில் கொண்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் பஸ் ஸ்டாண்டு அமைக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதன்படியே, திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரசு மருத்துவமனை எதிரில் பூங்கா ஒன்று இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டும் பணிகள் நடந்து வருகிறது... இந்த பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது... ரூ.11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் இதற்கான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாநகராட்சி: இதில், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்... இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், மேயர் அன்பழகன், எம்எல்ஏ பழனியாண்டி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கே.என்.நேரு பேசியபோது, "இன்று ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய பணிகள் நடைபெற போகிறது.. 6 மாதத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். எல்லா வசதிகளும் கொண்ட, பஸ் ஸ்டாண்டாக, இது திகழ போகிறது.. திருச்சி கொள்ளிடம் ஆற்று பகுதியில் 6 ஏக்கர் இடத்தில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ளது" என்றார்.
நாடாளுமன்றம்: "இன்று அவைக்கு வராததால், நாடாளுமன்றத்தில் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்களே" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரு, "நாங்களே ஸ்ரீரங்கத்தில், இங்கே லோக்கல்ல இருக்கோம்.. எங்க கிட்ட போயி நாடாளுமன்றம் பத்தியெல்லாம் கேட்கிறீங்களே" ஜாலியாக பதிலளித்தார் அமைச்சர் நேரு.
உடனே, சென்னையில் மழைநீர் தேங்குவது குறித்து அடுத்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு அமைச்சர் நேரு, "சென்னை மாவட்டத்தில் நசரத்பேட்டை தவிர மற்ற எங்குமே தண்ணீர் தேங்கவில்லை.. ஆவடி பகுதியில் மாநகராட்சி சார்பில் முற்றிலுமாக சரி செய்து விட்டோம். சும்மா ஏதாச்சும் நீங்களே கிளப்பி விடாதீங்கய்யா" என்று மீண்டும் கிண்டலாக சிரித்து கொண்டே பதிலளித்தார்.
அடிக்கல் நாட்டுவிழா: முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவிற்கான பூஜைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.. இந்த பூஜைகளை புரோகிதர் ஒருவர் நடத்தி கொண்டிருந்தார்.. புரோகிதரை சுற்றி, கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
"சீக்கிரம் பஸ் ஸ்டாண்டு கட்டிடம் எழும்பவில்லை என்றால், ஐயரைத்தான் திட்டுவேன்" என்று கேஎன் நேரு கிண்டலாக சொன்னார்.. உடனே அங்கிருந்த புரோகிதர், "நீங்க நினைச்சது எல்லாமே நடக்கும்..ண்ணே.. நீங்கதாண்ணே வருங்கால முதல்வரே" என்று அமைச்சர் நேருவை பார்த்து சொல்லவும், ஒரு செகண்ட் பதறிப்போய்விட்டார் நேரு..
வீடியோ: பிறகு சுதாரித்துக்கொண்டு, "ஏய்.. சும்மா இருய்யா.. எப்பா, நீ என்னை வீட்டுக்கு அனுப்பிடுவே போல இருக்கே" என்று நேரு சொல்லவும், அங்கிருந்தவர்கள் அனைவருமே சிரித்துவிட்டார்கள். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications