நேரு அண்ணன் ’துரோணாச்சாரியார்’! ஒரே போன் கால்.. அன்புக்கு கட்டுப்பட்ட அன்பில் மகேஷ்! உற்சாக திமுக!
திருச்சி : திருச்சியில் முதல்வர் வருகைக்காக அம்மாவட்ட அமைச்சர்களான கேஎன் நேரு, அன்பில் மகேஷ் ஒன்றாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் 'நேரு அண்ணன் துரோணாச்சாரியார்' என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழ்ந்து பேசி இருப்பது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
தமிழக அளவில் சரி திமுகவிலும் சரி மிக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் கேஎன் நேரு. கருணாநிதி ஆட்சியிலும் ஸ்டாலின் ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்து வருபவர். வேலூரில் துரைமுருகன், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியை போல திருச்சியில் அவரை எதிர்த்து அரசியல் செய்ய யாருமே இல்லை என்கிற நிலையே இருந்தது.
இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வருகைக்குப் பிறகு கேஎன் நேருவின் செல்வாக்கு லேசாக சரியத் தொடங்கியது.

திருச்சி திமுக
மாவட்ட அளவிலான பொறுப்பில் இருந்து மாநில பொறுப்புக்கு அவர் உயர்த்தப்பட்டாலும் மாவட்டத்தில் அவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கருதினர். கடந்த தேர்தலில் ஆட்சியை பெற முடியாத நிலையில் தற்போது ஆட்சியைப் பிடித்த போதும் இருவருக்குமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது இருந்து இருவரும் தனி அணியாக செயல்பட்டு வருவதாகவும் இதனால் தொண்டர்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை இருவருமே சமரசமாகவே உள்ளனர் என்கின்றனர் மூத்த உடன் பிறப்புகள்.

உட்கட்சி மோதல்
திருச்சி மாவட்டம் திமுக அளவில் வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில் கடந்த உட்கட்சி தேர்தலின் போது மாநகர் பகுதிகளை பிடிப்பதில் இருவரது ஆதரவாளர்களிடையே கடும் போட்டி இருந்தது. மேயர் தேர்தலின் போது திமுகவில் இருவரிடையே மோதல் வெளிப்படையாக இருந்த நிலையில், அதன் பிறகு அமைதியாகவே இருந்தனர் இருவரது ஆதரவாளர்களும். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கேஎன் நேருவும் முதல்வரின் வருகையை ஒட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்று இருக்கின்றனர்.

கே.என்.நேரு
நாளை மறுநாள் திருச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் திருச்சியில் நடைபெற்று இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் நேரு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அதன் பிறகு துறை ரீதியான பணிகளை கூட ஒத்திவைத்துவிட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதுதான் தற்போது திருச்சி மாவட்ட திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கூட்டத்தில் பேசிய அவர்,"அண்ணன் நேரு சொன்னது அப்படியே நடந்திருக்கிறது. அவர் ஆறுதலுக்காக பேசுபவர் அல்ல அவருடைய அனுபவம் அவரை சொல்ல வைத்திருக்கிறது. திருச்சி என்ன நினைக்கிறதோ அதைத்தான் தமிழ்நாடு நினைக்கும் என அவர் கூறினார்.

உற்சாக உடன்பிறப்புகள்
அது உண்மை எங்களை பொறுத்த வரைக்கும் திமுக தெற்கு மாவட்ட கழகத்தை பொருத்தவரைக்கும் நாங்கள் அவரை ஒரு துரோணாச்சாரியாராக தான் பார்க்கிறோம் என புகழ்ந்து பேசினார். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பலப்படுத்த அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என அன்பில் மகேஷ் அதே கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் தற்போது அதனை மறந்து இருவரும் அன்பை பொழிந்திருப்பது திருச்சி மாவட்ட உடன்பிறப்புகளை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications