எஸ்கேப்பான பாஜக ‛சங்கி’ பிரின்ஸ் மீது வழக்கு.. திமுக எம்பி செந்தில் குமார் பற்றிய அவதூறால் அதிரடி!
திருச்சி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கலர் புகை குண்டு வீச்சு தொடர்பான விவகாரத்தில் தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமார் குறித்து அவதூறாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பாஜகவை சேர்ந்த பிரவீன் ராஜ் என்ற சங்கி பிரின்ஸ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது கடந்த 13ம் தேதி லோக்சபாவுக்குள் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் ஸ்பிரே மற்றும் கலர் புகையை கக்கும் குப்பிகளை திறந்து சபை நடவடிக்கைகளை முடக்கினர். அதேபோல் பெண் உள்பட 2 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நடந்து கொண்டனர்.

இதையடுத்து லோக்சபாவில் அத்துமீறி நுழைந்த சாகர் சர்மா மற்றும் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த டி மனோ ரஞ்சன் (வயது 35) மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் வண்ண புகையை வெளியேற்றிய ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் லலித் ஜா உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்ட வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் லோக்சபாவில் நுழைந்த சாகர் சர்மா மற்றும் மனோ ரஞ்சன் ஆகியோர் கர்நாடகா மாநிலம் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியின் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா வழங்கிய பாஸ் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பிரதாப் சிம்ஹா எம்பியிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே தான் கடந்த 13ம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பிரவீன் ராஜ் என்ற சங்கி பிரின்ஸ் என்பவர் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் தர்மபுரி திமுக எம்பி செந்தில் குமாரின் போட்டோவை அவர் பயன்படுத்தி இருந்தார். அந்த பதிவில், ‛‛லோக்சபாவில் பாதுகாப்பு குளறுபடி ஏன் ஏற்பட்டது? ஏனென்றால் பொறுப்பற்ற உங்களை போன்ற எம்பிக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக நாடாளுமன்றத்துக்கான விசிட்டர் பாஸை எந்தவித விசாரணையும் இன்றி, பப்ளிசிட்டிக்காக வழங்குவதால் தான் நடந்துள்ளது'' என குற்றம்சாட்டியிருந்தார்.
இதுபற்றி திருச்சி மாவட்டம் ஆரோக்கியதாஸ் என்பவர் திருச்சி மாவட்ட காவல்துறையில் புகார் செய்தார். அதாவது பிரவீன் ராஜ் என்ற சங்கி பிரின்ஸ் என்பவர் உள்நோக்கத்தோடு தர்மபுரி எம்பி செந்தில் குமாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் அரசுக்கு எதிராகவும், உண்மைக்கு மாறாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து பிரவீன் ராஜ் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 504 (வேண்டுமென்றே ஒருவரை அவமதித்தல்), மற்றும் 505(1) (பி) (உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தினன் 66 வது பிரிவு ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது பிரவீன் ராஜ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications