திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டது எப்படி?.. திருச்சி டிஐஜி பரபரப்பு தகவல்
திருச்சி: திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் அவரை பின்புறமாக இருந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இரு தினங்களுக்கு முன்னர் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆடுகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.
இதனால் அவர்கள் ஆடு திருட்டு கும்பல் என்பதை அறிந்த பூமிநாதன் அவர்களை துரத்தி சென்ற போது இருவர் பூமிநாதனை படுகொலை செய்தனர். இது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்தனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதையடுத்து தஞ்சை கல்லணை பகுதியை சேர்ந்த ஆடு திருடும் கும்பலை சேர்ந்த இரு சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பு
இதுகுறித்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் எஸ்எஸ்ஐ பூமிநாதன் படுகொலைக்கு நடந்த பிறகு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. தனித்தனியாக துப்புகளை சேகரித்தோம். அதன் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு சிறார்கள்
அதில் ஒருவரது பெயர் மணிகண்டன் (19 வயது) மற்ற இருவர் சிறுவர்கள் (10, 17 வயது). சம்பவ இடத்தில் கிடைத்த சில முக்கிய தடயங்கள், சிசிடிவி கேமரா காட்சி உள்ளிட்டவைகளைக் கொண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். எஸ்எஸ்ஐ கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும்.

பின்புறமிருந்து தாக்குதல்
பூமிநாதன் பின்புறத்திலிருந்து தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களின் உடற்கூறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்புறமாக நின்று தாக்கியிருந்தால் தன்னை தடுத்திருக்கலாம். குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டன் சம்பவத்தின் போது தான் போதையில் இருந்ததாக கூறுகிறார். அதனால் அவர் எப்படி தாக்கப்பட்டார் என்பது குறித்து தெரியவில்லை.

பாதுகாப்பாக செல்ல
காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளின் போது பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். காவலர்களது பாதுகாப்பிற்காக ஆயுதங்களுடன் ரோந்து செல்வது குறித்து பரிசீலிக்கப்படும். நீதிமன்றத்தில் சாட்சிகள் சமர்பிப்பதை பொருத்து அதிகபட்ச தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆயுள் தண்டனையும் மரண தண்டனையும் கூட சாட்சிகளை பொறுத்து குற்றவாளிகளுக்கு வழங்க வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications