தனியார் கல்லூரியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி! உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
திருச்சி: திருச்சியில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மானாமதுரை நகரக் கழகச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் மகள் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று பிற்பகல் அவர் கல்லூரி விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மாணவர்களிடயேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் மரணம் - உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரக் கழகச் செயலாளர் திரு. பாலாஜி அவர்களின் மகள் செல்வி. தாரணி அவர்கள், திருச்சி தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
செல்வி. தாரணி அவர்களை இழந்துவாடும் திரு.பாலாஜி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நிலைக் குறைவு என நேற்று பிற்பகலில் தகவல் தெரிவித்த செல்வி. தாரணி அவர்களை உடனடியாக பார்க்கச் சென்ற போது நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, இரண்டு மணி நேரம் கழித்து செல்வி.தாரணி அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மாணவியின் தந்தை திரு.பாலாஜி அவர்கள் திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
எனவே, அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, செல்வி.தாரணி அவர்களின் மர்ம மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications