திருச்சியில் பிரமாண்ட பறவைகள் பூங்கா.. திறந்து வைத்தார் உதயநிதி! அங்கே என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
திருச்சி: திருச்சி அருகே கம்பரசம்பேட்டையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பறவைகள் பூங்கா பல்வேறு வசதிகளுடன் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 18 கோடி ரூபாய் செலவில் புதிய பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறவைகள் பூங்காவை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

இந்த பறவைகள் பூங்கா, திருச்சி - கரூர் சாலையில் காவிரிக் கரையோரம் கம்பரசம்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த பறவைகள் பூங்கா சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 சதுர அடி பகுதியை உள்ளடக்கியதாகவும், 30 அடி உயரமான பிரம்மாண்டமான கட்டமைப்புடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்கா பொதுமக்களும், குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் பார்க்கக்கூடிய முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் பூங்காவில் செயற்கை அருவிகள், குளங்கள் மற்றும் பல புதிய அமைப்புகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சி, மருதம், முல்லை, பாலை, நெய்தல் என 5 வகையான நிலப் பகுதிகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், மலைகள், காடுகள், சமவெளி, கடற்கரை, பாலைவனம் போன்ற இயற்கைச் சூழல்களை பின்பற்றியதுடன், இது சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த இடமாக உருவாக்கப்பட்டு உள்ளது. செயற்கை அருவிகள் மற்றும் குளங்கள் போன்ற அமைப்புகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளன.

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், இங்கு ஒரு மினி தியேட்டர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டரில் சுமார் 50 பேர் வரை ஒன்றாக அமர்ந்து பறவைகள் தொடர்பான திரைப்படங்களை காணலாம். மேலும், அறிவியல் சார்ந்த குறும்படங்களும் இங்கு திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த பூங்காவிற்கு வருவோருக்கான அடிப்படை வசதிகளான உணவகம், வாகன நிறுத்தும் வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 60 கார்கள் மற்றும் 100 இருசக்கர வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பறவைகள் பூங்காவை திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications