என்னது.. நான் திருச்சியில் போட்டியிடுகிறேனா... வைகோ பதில் என்ன தெரியுமா?
திருச்சி தொகுதியில் போட்டியிடுவது குறித்து வைகோ பதிலளித்துள்ளார்.
திருச்சி: வரப்போகிற தேர்தலில் திருச்சியில் போட்டியிடுவதை பற்றி இன்னும் எதுவும் முடியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சி தொகுதியில் வைகோ போட்டியிட போவதாக ஒரு தகவல் சுற்றி கொண்டே இருக்கிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திருச்சியையே கடந்த 12-ம் தேதி முதல் மையம் கொண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
மேலும் வரும் பிப்ரவரி 12, மார்ச் 8 ஆகிய தேதிகள் உட்பட இதே திருச்சியில்தான் நிறைய கூட்டங்களில் பங்கெடுக்க போகிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் வைகோ பேசும்போது சொன்னதாவது:

இந்தி திணிப்பு
"ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இறுதி தீர்ப்பு வருகிற செவ்வாய்க்கிழமை வருகிறது. அந்த தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதமாக வந்தால் அதற்கு காரணம் அதிமுக அரசுதான். பள்ளி-கல்லூரிகளில் இந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும்" என்றார்.

முடிவு செய்யவில்லை
உடனே செய்தியாளர்கள், வரப்போகிற எம்பி தேர்தலில் திருச்சியில் போட்டியிட போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு வைகோ, "நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்று பதிலளித்தார்.

சமுதாய முத்திரை
தென்மாவட்டத்திலேயே இதுவரை போட்டியிட்டு வருவதால் தன் மீது சமுதாய முத்திரை குத்தப்படுவதாக வைகோ கருதுவதாகவும், அதனை உடைக்கவே திருச்சியை தேர்ந்தெடுத்து போட்டியிட போவதாகவும் தகவல்கள் கசிந்தன. திருச்சி போன்ற பொதுவான தொகுதியில் நின்று வெற்றி பெற்றால் சமுதாய முத்திரை இன்றி, பொதுவான தலைவனாக மக்களை தன்னை ஏற்பார்கள் என வைகோ நம்புவதாகவும் கூறப்பட்டது.

கன்பார்ம்ட்??
அதற்கேற்றபடி கடந்தசில தினங்களாகவே வைகோ, பல்வேறு சமூக தலைவர்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்களை சந்தித்தும் பலவிஷயங்களை பேசியும் வருகிறார். வைகோவின் அடுத்தடுத்த இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, திருச்சி தொகுதியில் அவர் நிற்க போவது கன்பார்ம்ட் என்றே தோன்றுகிறது!!












Click it and Unblock the Notifications