மூச்சு திணறி.. பசி தாகம் ஏற்பட்டு.. தவித்து.. சுஜித்தை நினைக்கும்போது நெஞ்சு வெடிக்கிறது..வைகோ வேதனை
சுஜித்தின் நிலை கண்டு எனது நெஞ்சு பதைபதைக்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்
திருச்சி: மூச்சுதிணறி.. பசி ஏற்பட்டு, தாகம் ஏற்பட்டு.. ஒவ்வொரு நொடியும் மரண வேதனையை சுஜித் அனுபவித்திருப்பதை நினைக்கும்போது நெஞ்சு வெடிக்கிறது... கல்லுக்கு இரக்கம் இல்லை..கற்கள் கூட கருவிகளை பழுதாக்கிவிடுகிறது..
நடுக்காட்டுப்பட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்திருந்தார். சுஜித் மீட்பு பணிகள் குறித்து பார்வையிட்டார், அது சம்பந்தமாக அங்கிருந்த அதிகாரிகள், அமைச்சர்களிடமும் கேட்டறிந்தார். பிறகு சுஜித் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்ன வைகோ, செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "2 வயசான குழந்தை மூச்சுதிணறி பசி ஏற்பட்டு, தாகம் ஏற்பட்டு ஒவ்வொரு நொடியும் மரண வேதனையை அனுபவித்திருப்பதை நினைக்கும்போது நெஞ்சு வெடிக்கிறது. சுஜித்தின் நிலை கண்டு எனது நெஞ்சு பதைபதைக்கிறது.

தண்ணீர்
சுஜித் முதலில் 25 அடியில்தான் இருக்கிறான் என்று நினைத்தோம்.. ஆனால் 70 அடிக்கு போய்விட்டான். ஓடியாடி விளையாடிய இடத்திலேயே குழந்தை விழுந்துள்ளான். குழி தோண்டுபவர்கள் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், அதை மூடுவதில்லை. அப்படியே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதுதான் ஆபத்தாக முடிகிறது.

விஜயபாஸ்கர்
அரசு குழந்தையை மீட்க பல வித முயற்சிகளை செய்து வருகிறது. அமைச்சர்கள், கலெக்டர், அதிகாரிகள் என அத்தனை பேருமே 4 நாட்களாக இங்கேயேதான் இருக்கிறார்கள். சகோதரி ஜோதிமணியும் இங்கேயே இருக்கிறார். ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு கட்டத்தில் சரிவை ஏற்படுத்திவிட்டது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னார். எங்கிருந்தெல்லாம் இயந்திரங்களை வரவழைக்க முடியுமோ அங்கிருந்தெல்லாம் அவர் வரவழைத்தார்.

செவ்வாய் கிரகம்
அரசுக்கு ஒரு திட்டவட்டமான தொழில் நுணுக்கம், அதற்குரிய கருவிகள் தேவை. நிலவுக்கு செல்ல முடிகிறது... அங்கு மனிதனை நடக்க வைக்க முடிகிறது.. செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப முடிகிறது. ஆனால் ஒரு குழந்தை இப்படி சிக்கியிருக்கும்போது, அதற்கான இயந்திரத்தை கண்டுபிடிக்க இயலவில்லை. இது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இப்படி விபத்துக்களில் சிக்குவோரை உயிரோடு காப்பாற்றும் தொழில் இயந்திரத்தை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்த வேண்டும்.. திட்டவட்டமான தொழில்நுட்பத்தை அரசு உருவாக்க வேண்டும்.

இரக்கம் இல்லை
சுஜித்தின் நிலைமை, குடும்பத்தின் நிலைமையை நினைத்துகூட பார்க்க முடியவில்லை. கல்லுக்கு இரக்கம் இல்லை.. இங்கிருக்கும் கற்கள் கூட கருவிகளை பழுதடைய செய்கின்றன.. எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டும், இன்னும் நம்பிக்கையோடு மக்கள் இருக்கிறார்கள். மக்கள் கண்ணீரோடு வானமும் சேர்ந்து அழுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications